“ கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. எனவே, மக்களை காப்பாற்ற வேண்டுமெனில் நாட்டை முழுமையாக முடக்குவதைத்தவிர தற்போது வேறு வழியில்லை.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கொரோனா வைரஸ் தொற்று மோசமான நிலைமைக்கு வந்துள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் முன்கூட்டியே எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கைகளை விடுத்திருந்தாலும் அரசு பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டதாலேயே பாரதூரமான நிலைமை உருவாகியுள்ளது.
நாட்டை முழுமையாக முடக்ககூடாது என்ற நிலைப்பாட்டில்தான் நாம் இருந்தோம். ஆனால் மக்களை காப்பாற்ற வேண்டுமானால் முழு முடக்கத்தைதவிர தற்போது மாற்றுவழியே இல்லை. நாளாந்தம் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர். அரசால் வெளியிடப்படும் தகவல்களையும் நம்பமுடியாத நிலைமையே காணப்படுகின்றது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான முழுமையான பொறுப்பு சுகாதார தரப்புக்கு வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் முன்னோக்கி பயணிக்க முடியாது. சுகாதார அமைச்சர், அவ்வமைப்பின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகிய மூவரும் தமக்கான பொறுப்பை சரிசர நிறைவேற்றவில்லை. இவர்கள் மாற்றப்பட வேண்டும். துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளை உள்வாங்கி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.” – என்றார்.










