இன, மத, கட்சிப் பேதமின்றி இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். எனவே போராட்டங்களில் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் செவிமடுக்க வேண்டுமென பதுளை சர்வமத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பதுளை மாவட்ட சர்வமதக் குழுவினரின் கூட்டம் நேற்று பதுளை ‘ரிவர் சைட்’ கிரான்ட் விடுதியில் நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ‘நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையேற்றம், எங்கு பார்த்தாலும் வரிசைகள் என்று நாட்டு மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை எதிர்நோக்கியுள்ளனர். நாடும் வங்கரோத்து நிலையினை அடைந்துவிட்டது. மக்கள் தத்தமது வாழ்வாதாரங்களை முன்னெடுக்க முடியாத இக்கட்டான சூழல் காணப்படுகின்றது.
நாட்டு அரசில் கூடுதலான அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றமையினால், எவரின் குரலுக்கும் செவிமடுக்காமல் தன்னிச்சையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதுவே, நாட்டில் ஏற்பட்டிருக்கும் பாரிய நெருக்கடி நிலைக்கு மூலக் காரணமாகும். அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டியது முக்கியமாகும். இன்னும் ஓரிரு மாதங்களில் நாட்டு மக்களினது உணவிற்கும் வழியின்றி, பஞ்சம் தலைவிரித்தாடப் போகின்றது.
எமது நாட்டில் இன, மத, கட்சிப் பேதங்களுக்கப்பால் இளைஞர் சமூகத்தினர் ஓரணியில் திரண்டு செயற்படுகின்றனர். இத்தகைய நிலை நாட்டில் ஸ்திரமானதோர், ஆரோக்கியமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பக் கூடியதாகவிருக்கின்றது. இவ்விடயத்தில் மகிழ்ச்சியடைய வேண்டியுள்ளது.
இன ஒன்றிணைவு, கலை, கலாசார ஒன்றிணைவு, மதங்களுக்கான ஒன்றிணைவு, சமத்துவம், சகோதரத்துவம் பல்லின இளைஞர் சமூகத்தினர் மத்தியில் காணப்படுகின்றன. இதுவே இந்நாட்டிற்குத் தேவை. இத்தகைய கோட்பாடுகளை முன்னிலைப்படுத்தி, இளைஞர் சமூகத்தினர் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் செவிமடுக்க வேண்டும். அடம்பிடிப்பதில் பயன் ஏதும் கிடைக்கப் போவதில்லை என அவர்கள் தெரிவித்தனர்.