ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 2000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்று கடந்த காலங்களில் பல மேடைகளில் சாத்தியமற்ற உறுதிமொழிகளை வழங்கினார். எனினும், கடந்த (03) ஆம் திகதி நுவரெலியாவில் நடந்த கூட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான அளவு சம்பளம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கின்றார். இவ்வாறான பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
டயகம பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கடந்த 4 வருடங்களுக்கு மேலாக பல்வேறு அவமானங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்தித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்தோம். தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம்.
தொடர்ந்து எமது மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நாம் நில உரிமையற்ற சமூகமாக இருக்கிறோம். இதற்காக காணி உரிமை நிச்சயம் வேண்டும். காணி உரிமையை மக்களிடையே ஒப்படைத்தால் 90 சதவீதமானோர் தானாகவே வீடுகளை கட்டிக் கொள்வார்கள்.
காரணம் தோட்டப்பகுதியில் வாசிப்பவர்கள் இன்று ஒருசிலர் மாத்திரம் தோட்டத்தில் தொழில் புரிகின்றனர். ஏனையோர் அரச ஊழியர் ஆகவும் , தலைநகரங்களில் தொழில் புரிவோராகவும் அல்லது வெளிநாடுகளில் தொழில் புரிவோராகவும் உள்ளனர். இதனால் அவர்களின் தேவைக்கு ஏற்றது போல் வீடுகளை அமைத்துக் கொள்வார்கள் கூறுவதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதற்காகவே தான் இன்னமும் காணியுரிமைக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஒரு சில அரசியல்வாதிகள் கூறுகின்றார்கள் மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கினால் அவர்களுக்கு கஷ்டம் ஏற்படும் போது அவற்றை விற்பனை செய்து விடுவார்கள் என்று இது அரசியல்வாதிகளுக்கு தேவையற்ற ஒரு விடயமாகும்.
தொடர்ந்து எங்களுக்கு விமர்சனங்கள் பல இருந்தாலும் நான்கு வருடகாலமாக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன். அதேபோல் மக்களின் பிரச்சினைகளுக்கு களத்தில் இறங்கி நான் குரல் கொடுத்திருக்கின்றேன். எந்த இடத்திலும் நான் ஓடி ஒளியவில்லை இதற்கு ஜனாதிபதி வழங்கும் பெயர் சண்டித்தனமான அரசியல். நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது, நாடு வங்குரோத்து அடைந்த போது கூட மலையகத்தை பொறுத்தவரையில் இரண்டு சம்பள உயர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம் இதனையும் போராடி பெற்றோம் என தெரிவித்தார்.
நானுஓயா நிருபர்
