இ.தொ.கா. இன்று 84 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது. இந்நிலையில் அக்கட்சியின் தற்போதைய தலைவர் செந்தில் தொண்டமானின் ஊடகப்பிரிவால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 83 வருடங்களை பூர்த்தி செய்து மலையகத்துக்காக பாரிய பல சேவைகளை முன்னெடுத்துள்ளது. பிரஜா உரிமை அற்ற சமூகமாக இருந்த மலையக சமூகத்திற்கு பிரஜா உரிமை பெற்றுக் கொடுத்து, மலையக சமூகத்தினருக்கு சம உரிமையை இ.தொ.கா பெற்றுக்கொடுத்தது.
உரிமைகள், அபிவிருத்தி போன்ற பல விடயங்களை மலையகத்தில் முன்னெடுத்துள்ளது.
மேலும் மலையக மக்களுக்கு குடியுரிமையை பெற்றுக்கொடுத்தமை, ஆண், பெண் இருப்பாளருக்கும் சமமான சம்பளம், தோட்டப்புறங்களில் கொங்ரீட் பாதைகள் அமைத்தமை, பாடசாலை மற்றும் வைத்தியசாலைகள் நிர்மானிக்கப்பட்டமை, ஆசிரியர் நியமனங்கள் என இ.தொ.காவின் சேவை பரந்தப்பட்டதாகும்.
1987ஆம் ஆண்டு முதல் முதலில் மலையகத்தில் தனிவீடுகள் அமைக்கும் பணியை இ.தொ.கா ஆரம்பித்து வைத்ததுடன், கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்திகளையும் முன்னெடுத்துள்ளது. இந்த வேலைத்திட்டங்கள் மலையகத்தில் முழுமையாக வெற்றியடைய இ.தொ.கா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றும். தேசிய நீரோட்டத்தில் மலையகத்தை முழுமையான அபிவிருத்தியுடன் முன்னோக்கி கொண்டு செல்ல இ.தொ.கா முன்னின்று செயற்படும்.
