தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 வரவு செலவுத் திட்டமானது, மக்களுக்கு சலுகைகள் இல்லாத சர்வதேச நாணய நிதியத்தின் வெறும் வரவு செலவுத் திட்டமாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சஜித், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத் திட்டமாக அமையவில்லை. நாட்டு மக்கள் இன்று பல துயர்கரமான சூழ்நில்மைகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். வறுமை அதிகரித்து காணப்படுகின்றன. வேலையின்மையும் அதிகரித்துள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50மூ மேலாக பங்களிக்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகள் வீழ்ச்சி கண்டு, அவர்களினது வாழ்க்கை சீர்குலைந்து போயுள்ளன. இவர்களைப் பாதுகாக்க இந்த அரசாங்கத்தால் முடியாதுபோயுள்ளது.
விவசாயிகள், மீனவர்கள், சுயதொழில் புரிவோர், வேலையில்லாப் பட்டதாரிகள் என அனைவரும் தங்கள் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வுகளும் இல்லாமல் தவிக்கின்றனர்.
இந்த வரவுசெலவுத் திட்டமானது ஏமாற்று, பொய்கள் வேலைகள் தமது இருப்பை முன்னோக்கி கொண்டு செல்லும் வரவுசெலவுத் திட்டமாக அமைந்துள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சட்டக் கட்டமைப்புச் சட்டமொன்றை உருவாக்குவேன் என்று ஜனாதிபதி கூறினாலும், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இந்நேரத்தில், இது தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என்று சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல் குறித்து ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு வந்தன. ஆனால் இன்று திசைகாட்டி அரசாங்கத்தைச் சேர்ந்தோர் இந்த போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய பிற்பாடு இவற்றை ஊடகங்களில் காண்பிப்பதை தவிர்த்து அதனை மறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இரட்டை நாக்கு கொண்ட அரசாங்கமாக காணப்படுகின்றது. மக்களுக்கு நிவாரணம் வழங்காத, ஐ.எம்.எவ். எழுதிய வரவுசெலவுத் திட்டத்தின் வடிவத்தை எடுத்த வரவுசெலவுத்திட்டமாகும். வறுமை ஒழிப்பு திட்டங்கள் எதுவும் இந்த வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடங்கி காணப்படவில்லை.
முன்மொழியப்பட்டுள்ள வரவுசெலவு கருத்திட்டங்களுக்கு மிகக் குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளன. 2025 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளை பார்க்கும் போது, ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு ஒதுக்கீடுகளினதும் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்பட வேண்டும். அது இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இவ்வாறு முன்னேற்ற மீளாய்வுகளை சமர்ப்பிக்காத நிதியமைச்சரான ஜனாதிபதி அவர்கள் இன்று பொய்களை அடிக்கி வைத்தார். இந்த ஆளும் தரப்பினர் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அரசாங்கத்திற்கு இன்னும் மனச்சாட்சி வரவில்லை.” – என்றார் சஜித் பிரேமதாச.










