” இனிவரும் காலப்பகுதியிலாவது நாட்டை விஞ்ஞானப்பூர்வமாக முடக்கி, மக்களை பாதுகாப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் அமுலில் உள்ளதென அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நாடு முறையாக முடக்கப்படவில்லை. இதனால் உரிய பலன் கிடைக்காத சூழ்நிலைமையே காணப்படுகின்றது.
எனவேதான் நாட்டை விஞ்ஞானப்பூர்வமாக முடக்குமாறு வலியுறுத்திவருகின்றோம். அப்போதுதான் மக்களின் உயிரை பாதுகாக்க முடியும். தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். இனிவரும் நாட்களிலாவது அதனை செய்யுமாறு அரசை வலியுறுத்துகின்றோம்.
அதேவேளை, மூன்றிலிரண்டு பலத்தை கேட்டனர். மக்கள் அதனை வழங்கினர். அதன்பின்னர் ’20’ வேண்டும் என்றனர். அதுவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. முடியாத கட்டத்தில் பஸில் வேண்டும் என்றனர், பஸிலும் நாடாளுமன்றம் வந்தார். அமைச்சரானார். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.” – என்றார்.