மக்களை அடக்கி ஆளவா அவசரகால சட்டம்? ஆளுந்தரப்பு மறுப்பு

போராட்டங்களை ஒடுக்கவும், சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும், அடக்குமுறையான ஆட்சியை முன்னெடுப்பதற்காகவுமே அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அரசு முற்றாக நிராகரித்துள்ளது.

இது தொடர்பில் விளக்கமளித்த ஆளுங்கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி கூறியவை வருமாறு,

“ நல்லாட்சிபோன்று மக்களை ஆணைக்கு புறம்பாக அடக்குமுறை ஆட்சியை முன்னெடுக்கும் தரப்பு எமது அரசு கிடையாது. மக்கள் எம்.சி.சி. உடன்படிக்கை வேண்டாம் என்றனர், அதனை இரத்துசெய்வோம். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்திலும் எதிர்ப்புகள் வலுத்தன. அதனை நிறுத்தினோம். தன்னிச்சையாக செயற்படாமல் மக்களின் கருத்துகளையும் செவிமடுத்தே அரசு பயணிக்கின்றது.

அத்துடன், எதிரணி உறுப்பினர்களை வேட்டையாடவும், சமூக ஊடகங்களை ஒடுக்கவுமே அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக நாட்டில் பிரச்சினைகள் வலுப்பெற்றால் ஆட்சி தாமாக தனது கைக்கு வந்துவிடும் என்ற நினைப்பிலேயே அவசரகால சட்டம் வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவரும் கருத்து வெளியிடுன்றார்.

கடந்த காலங்களில் 800 வரையான போராட்டங்கள் இடம்பெற்றன. எந்தவொரு போராட்டத்தையும் வன்முறை ஊடாக அரசு கட்டுப்படுத்தவில்லை. தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறியவர்களே சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டனர். ஆக அடக்குமுறைகளை கையாள்வதற்காக அவசரகால ஏற்பாடுகளை பயன்படுத்த வேண்டிய தேவை எமது அரசுக்கு கிடையாது.” – என்றார் ஜகத் குமார எம்.பி.

Related Articles

Latest Articles