” கொரோனா தொற்று மற்றும் வாழ்க்கைச்சுமை அதிகரிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, உள ரீதியிலும் தாக்கி பலவீனப்படுத்துவதற்கான ஆயுதமாக 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அரசாங்கம் பயன்படுத்தக்கூடாது.” – ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தினார்.
கண்டியில் இன்று (30.08.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது. நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு கைகொடுக்கின்றோம் என பெரும் பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டது.
ஆனால் சமுர்த்தி கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு பெறுபவர்கள் நிவாரணம் பெறுவதற்கான பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எப்படியெல்லாம் வெட்ட முடியுமோ, அந்தளவுக்கு வெட்டு, குத்துகளை செய்து சொற்பளவானவர்களுக்கே 2 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலர் இருக்கின்றனர். அவர்களிலும் குறிப்பிட்ட சிலருக்கே கொடுப்பனவு கிடைக்கும் நிலைமை காணப்படுகின்றது. இதனால் மக்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்குமிடையில் முறுகல் நிலைமை ஏற்படுவதை காணமுடிகின்றது. அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் இன்மையால் இன்று அரசாங்க ஊழியர்களும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
சொற்பளவானோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகூட அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படுவதில்லை. பொது இடங்களில் வைத்து வழங்கப்படுவதால் உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயமும் இருக்கின்றது.
மறுபுறத்தில் தற்போதைய நிலைமையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனியுடன் பால் தேநீர் குடிப்பதற்கான சுதந்திரம்கூட பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாவிலும் புறக்கணிப்பு இடம்பெற்றால் அவர்கள் உள ரீதியிலும் பாதிக்கப்படுவார்கள். விரக்தி நிலைமை உருவாகும். எனவே, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அந்த கொடுப்பனவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.