‘காணி சுவீகரிப்புக்காக அரசால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த வர்த்தமானியை அரசு மீளப்பெறாவிட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘ காணி திணைக்களத்தால் , காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி தொடர்பில் மக்களுக்கான நீதி அமைப்பின் ஊடாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
இந்த நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் கீழ் குறித்த பிரதேசத்தை அடையாளப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரித்தால் அப்பகுதியில் உள்ள காணி உரிமையாளர்கள் அல்லது உரிமை கோருபவர்கள் மூன்று மாத காலத்துக்குள் தமது காணிக்கான உரித்தை உறுதிப்படுத்த வேண்டும். காணி உரித்துக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் இந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.” – எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
1931 ஆம் ஆண்டு காலப் பகுதியில் காணி உரித்து தொடர்பில் காணப்பட்ட பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்ட இடப்பெயர்வுகள் இடம்பெற்றன. இதனால் பலர் தமது காணிக்குரிய ஆவணங்களை இழந்துள்ளனர். அதேபோல் சுனாமி அனர்த்தத்தால் பலர் தமது ஆவணங்கள் மற்றும் உரித்துக்களை இழந்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் அசாதாரன சூழல் தொடர்ந்து காணப்படுகின்ற நிலையில் மீள்குடியேற்றம் முழுமை பெறாத நிலையில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் அகதிகளாக வாழ்கின்றனர். இவ்வாறு தீர்க்கப்படாத சிக்கல்கள் காணப்படுகின்ற சூழலில் காணி நிர்ணயச் சட்டத்தை அமுல்படுத்துவது மிக மோசமானதொரு செயற்பாடாகும்.
எதிர்வரும் நாட்களில் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்குச் சட்ட ஆலோசனை நடவடிக்கைகளுக்குச் செல்வோம். மேற்படி வர்த்தமானி வாபஸ் பெற வேண்டும் என்பது எமது பிரதான வலியுறுத்தலாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்த வர்த்தமானியைப் பிரசுரித்தது பொருத்தமானதல்ல. மக்கள் காணிகளை சுவீகரிப்பதற்கு இடமளிக்கமாட்டோம்.” – என சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.