மக்கள் திண்டாட்டம் – ஆளுங்கட்சியினர் நடுக்கடலில் கொண்டாட்டம்

பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து மக்கள் திண்டாடும் நிலையில், மஹிந்த ராஜபக்சவும், அமைச்சர்களும் மக்கள் பணத்தில் கப்பல்களில் நடுக்கடலுக்கு சென்று விருந்துபசாரம் நடத்துகின்றனர் – என்று எதிர்க்கட்சி தலைவர் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச இது தொடர்பில் கூறியதாவது,

” ஜனவரி மாதம் பாடசாலை மாணவர்களுக்கான சீசன் டிக்கெட்டுகள் இரத்து செய்யப்பட்டுள்ள வேளையில், வற் வரி விதிப்பால் மக்கள் பல்வேறு அழுத்தங்களுக்கும் அல்லல்களுக்கும் உள்ளாகியுள்ள இவ்வேளையில்,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பாராளுமன்றத்தில் அரசாங்கத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள் குழுவொன்று துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்ஸகாவா மற்றும் தியாகொவுல்லா ஆகிய 02 கப்பல்களை பயன்படுத்தி கடந்த இரு நாட்களுக்கு முன்பு கடலில் விருந்துபசார கொண்டாட்டமொன்றை நடத்தியுள்ளனர், இதற்கு துறைமுக அமைச்சர் எழுத்து மூல அனுமதியும் வழங்கியுள்ளார்.

நாடு வங்குரோத்தாகி கிடக்கும் இவ்வேளையில் மதுபானம், துறைமுகத்தில் உள்ள உணவகத்தில் இருந்து உணவு குடிபான வகைகளை கூட பெற்றுக் கொண்டு, நாட்டிற்குச் சொந்தமான கப்பல்களைப் பயன்படுத்திக் கொண்டு எரிபொருளை விரயம் செய்வதும், நடுக்கடலில் விருந்து நடத்தி கொண்டாட்டம் நடத்த, கும்மாளமடிக்க முடியுமா என்பது பிரச்சினைக்குரிய விடயம், அமைச்சர்களின் தனிப்பட்ட செலவில் இந்த விருந்துபசாரங்களை நடத்துவது பிரச்சினையல்ல என்றாலும்,அரச வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான விருந்துபசாரங்கள் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles