இதற்கான தீர்வாக ரூபாவில் பணம் செலுத்தி மசகு எண்ணெய் இறக்குமதிசெய்யும் முறையை நோக்கிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
26 நாட்களாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் மேலும் 25 நாட்களுக்கு தேவையான எண்ணெய் கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக, இலங்கைக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கட்டாரிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பில் அமைச்சர் கம்மன்பில அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றையும் மேற்கொண்டிருந்தார்.
ஆனால் இதுவரை அந்த கடனையோ, நீண்ட கால கடன் ஒப்பந்தத்தையோ பெற்று மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடியவில்லை.
எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தமது வரலாற்றில் ஒருபோதும் பெற்றோலியம் தொடர்பான கொள்வனவுகளுக்காக இலங்கை ரூபாவில் பணம் செலுத்தியதில்லை எனவும், முதல் தடவையாக இவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாணய ஒதுக்கம் தொடர்பில் மத்திய வங்கி நேற்று வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில், ஜனவரி மாதத்திற்குள் நாட்டின் உத்தியோகபூர்வ அமெரிக்க டொலர் ஒதுக்கம் ஒரு பில்லியனாக வீழ்ச்சியடையும் என தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி மாதத்திற்குப் பிறகு அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் நாடு பாரிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.










