மண்சரிவு அபாயத்தால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள டிப்டீன் பாடசாலை மாணவர்கள்

‘மழை பெய்தா நமக்கு படிக்க முடியாது. சாரலில நனைவோம். ரொம்ப கஷ்டமாயிருக்கும். கோயிலுக்குள்ள எல்லாரும் போயிருவோம்’ – டிப்டீன் இலக்கம் 02 தமிழ் பாடசாலையில் தரம் நான்கில் கல்வி கற்கும் வீ. ஜெசிகரன் என்ற சிறுவனின் சோகம் கலந்த குரல் இது.

நிவித்திகலை கல்வி வலயத்துக்குட்பட்ட டிப்டீன் இலக்கம் 02 தமிழ் வித்தியாலயம் மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டது. அதன் பின்னர் மாணவர்கள் தற்காலிக கட்டிடம் ஒன்றில் வைத்து கற்பிக்கப்படுகிறார்கள்.

அங்கு பயிலும் மாணவர்கள் நிரந்தர பாடசாலையொன்று இல்லாமல் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளார்கள்.

சிங்கராஜவில் யானை நடமாடும் அச்சம் உள்ளதால் இப்போது அந்தப் பயம் அவர்களை மேலும் சூழ்ந்துகொண்டுள்ளது. ஏனென்றால காட்டுக்கு மிக அருகில் அவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இறக்குவானை நகரிலிருந்து சுமார் 11.8 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருந்தது டிப்டீன் பாடசாலை. அந்தப் பாடசாலைக்கு அருகில் நிலகீழ் மாணிக்கக் கல் அகழ்வுகள் கடந்த காலங்களில் சட்டவிரோதமாக இடம்பெற்றுள்ளன. இதனால் கட்டடத்தில் வெடிப்பு ஏற்படத் தொடங்கியது.

இந்நிலையில் மாணவர்களை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறும் அவ்விடத்தில் பாடசாலையை நடத்திச் செல்ல வேண்டாம் என்றும் அதிபர் உள்ளிட்ட நிர்வாகத்தினருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதியன்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அன்றைய தினம், மாகாண சபை அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினர் உள்ளிட்ட பலர் பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்.

அந்தப் பாடசாலைக்கு அருகில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த மண்சரிவினால் பாடசாலைக்கு ஆபத்து ஏற்படும் என்பதைவிட நிலத்துக்குக் கீழ் அகழப்பட்டுள்ளதால் கட்டடம் தாழிறங்கும் அபாயம் உள்ளதாக அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து மாணவர்கள் நிர்க்கதிக்கு உள்ளானார்கள். அங்கு தரம் ஒன்று முதல் ஒன்பது வரை 71 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். மேலும், அதிபர் உட்பட ஏழு ஆசிரியர்கள் உள்ளனர்.

அதிகாரிகளின் அறிவுறுத்தலையடுத்து மாணவர்கள் தங்களுடைய கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு பொருத்தமான இடம் இல்லாமற்போனது. டிப்டீன் தோட்டமானது சுற்றிலும் சிங்கள கிராமங்கள் காணப்படுகின்றன. அங்குள்ள விகாரையொன்றில் மாணவர்களை தங்க வைக்குமாறு அதிகாரிகளால் கோரப்பட்டது. எனினும் மாணவர்களுக்கு அங்கு உரிய பாதுகாப்பு இன்மை காரணமாக அந்தக் கோரிக்கை பாடசாலை நிர்வாகத்தினால் நிராகரிக்கப்பட்டது.

டிப்டீன் தோட்டத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்துக்கு அருகில் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்த கலாசார நிலைய கட்டடம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினால் ஆராயப்பட்டது. அங்கு துப்புரவுப் பணிகள் இடம்பெற்று பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியில் மாகாண சபையின் நிதியொதுக்கீட்டில் கூரையும் ஓரளவு உயரமான மதிலும் அமைக்கப்பட்டது.

அங்கு கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது தற்காலிக ஏற்பாடாகும். சிங்கராஜ வனத்தை அண்டிய தோட்டம் என்பதால் அங்கு அடிக்கடி அடைமழை பெய்வதுடன் கடும் காற்றுடனான காலநிலையே காணப்படுகிறது.

மழைக்காலங்களி;ல் அந்தக் கட்டடம் முழுவதுமாக நனைந்து கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாமல் போகிறது.

மேலும் வகுப்புகள் மிக நெருக்கமாக இருப்பதால் அவதானம் செலுத்துவதில் சிரமமாக இருப்பதாக மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

புதிய காணியை ஏன் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது?

டிப்டீன் தோட்டம், எல்.ஓ.எல்.சி கம்பனி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. பாடசாலைக்கு பொருத்தமான காணியை பெற்றுக்கொடுக்க நிர்வாகம் விரும்பவில்லை.

பாடசாலைக்கு புதிய காணியொன்றின் அவசியம் குறித்தும் மாணவர்களின் நிர்க்கதியான நிலைமை குறித்தும் பல்வேறு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மாகாண சபை அமைதியாக இருக்கிறது. மாகாண கல்விச் செயலாளர் அக்கறைகொள்ளவில்லை. இப்படியொரு விடயம் நடந்திருக்கிறதா என்பது கூட தெரியாத சிறுபிள்ளைபோல ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ இருக்கிறார்.

வலயக் கல்விப் பணிமனை எதுவும் செய்யவில்லை.

இந்நிலையில், சிங்கராஜ காட்டுக்கு அருகில் உள்ள காணியொன்றை தோட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. சதுப்பு நிலத்தில், மிகப் பெரிய கற்பாறைகள் காணப்படுகின்ற இடத்தில் மலைமேடுகள் நிறைந்துள்ள காணியை தருவதாக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

அந்காணிக்கு மத்தியில் சிறிய பாதையொன்று செல்கிறது. அந்தப் பாதையின் இருமருங்கிலும் கட்டங்களை அமைத்துக்கொள்ளுமாறு நிர்வாகம் அழுத்தம் கொடுக்கிறது.

நிர்வாகத்தினால் பரிந்துரைக்கப்படும் அந்தக் காணி பாடசாலை அமைப்பதற்கு எந்த விதத்திலும் பொருத்தமற்றது. இறக்குவானை- பொத்துப்பிட்டிய பிரதான வீதியிலிருந்து நீண்ட தூரம் அந்தக் காணிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. தூர இடங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அங்கு செல்வது சிரமமாகும். மேலும் கற்பாறைகள் நிறைந்து காணப்படுவதாலும் சதுப்பு நிலம் என்பதாலும் சிறிய மைதானம் ஒன்றைக் கூட அமைத்துக்கொள்ள முடியாது.

இந்த நிலைமை சிங்கள பாடசாலையொன்றுக்கு நடந்திருந்தால் நிர்வாகம் இப்படி நடந்துகொள்ளுமா என்ற கேள்வி எழுகிறது.

இது குறித்து தோட்ட நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட இடத்தை வழங்குவதற்கு ஒப்புதலுக்கென கடிதம் ஒன்று கம்பனியின் நிறைவேற்று அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

<<அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்?>>

டிப்டீன் தோட்ட பாடசாலை குறித்து அரசியல்வாதிகள் பலரது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டபோதிலும் ஆரோக்கியமான எந்த முயற்சிகளும் இடம்பெறவில்லை. இரத்தினபுரி மாவட்டத்துக்கு நாடாளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமையின் விளைவை அப்பகுதி மக்கள் இப்போது அனுபவிக்கிறார்கள் என்றே கூற வேண்டும். ஏனென்றால் சிங்கள அரசியல்வாதிகள் எவரும் நிர்க்கதிக்குள்ளான மாணவர்களின் நலனில் அக்கறைசெலுத்தவில்லை.

இந்தப் பாடசாலைக்கு டிப்டீன் தோட்ட மூன்றாம் பிரிவில் இரண்டு ஏக்கர் காணியை ஒதுக்கித்தருமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் 2021.12.23 ஆம் திகதியன்று ஹப்புகஸ்தென்ன பெருந்தோட்ட நிறுவனத்துக்கு (முன்னர் நிர்வகித்த நிறுவனம்) கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆயினும் அந்த இடத்தில் காணியை பெற்றுத்தர நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

பாடசாலையினர் கோருவது தேயிலை அதிகமாக காணப்படுகின்ற இடம் என்பதால் அதனைத் தர முடியாது என தோட்ட நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள தேயிலைச்செடிகள் அனைத்தும் சுமார் 30 வருடங்கள் பழைமையானவை. அவற்றிலிருந்து அதிக வருமானம் கிடைப்பதாக சொல்வதை சந்தேகக் கண்ணோடே பார்க்க வேண்டும்.

உண்மையில், அந்தத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிள்ளைகளே அங்குள்ள பாடசாலையில் கல்வி கற்கிறார்கள். அவர்களின் நலனில் அக்கறைகொள்ள வேண்டியது தோட்ட நிர்வாகத்தின் கடமையாகும்.

மேலும், மாணவர்களின் கல்வி கற்பதற்கான உரிமையை அரசியல்வாதிகள் உறுதிசெய்ய வேண்டும். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக பிரமுகர்கள், தங்களுடைய மாவட்டம் என்ற வட்டத்துக்குள் இருக்காமல் இதுகுறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.

இது குறித்து பாடசாலையின் அதிபர் ஐயாக்கன்னு ராம்குமார் எமக்கு கருத்து வெளியிடுகையில்,

தோட்ட நிர்வாகத்தினால் எமக்கு தருவதாக சொல்லப்படும் இடமானது மேடு பள்ளமாகவும் கற்பாறைகள் நிறைந்ததாகவும் பொருத்தமற்று காணப்படுகிறது. மேலும் அந்த இடத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது.

எமது பாடசாலை ஆசிரியர்கள் நீண்ட தூரத்திலிருந்தே வருகை தருகிறார்கள். ஆகையால் பிரதான பாதைக்கு அருகில் பாடசாலை அமையும் பட்சத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வசதியாக அமையும். இது குறித்து கல்வி அதிகாரிகள் மற்றும் அரசியல்பிரமுகர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளோம் என்றார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் பின்தங்கிய தோட்டப்பகுதிகளில் டிப்டீனும் ஒன்றாகும். வருமானத்தில் மிக மோசமான பாதிப்பை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த அந்த மாணவர்களும் இந்த நாட்டின் குழந்தைகளே.

ஏனைய சமுதாய மாணவர்களுக்கு உரிய வகையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்யும் கல்வி அமைச்சும் அதிகாரிகளும் இந்த மாணவர்களின் விடயத்தில் மாத்திரம் பாராமுகமாக இருப்பது கண்டனத்துக்குரியது.

-நிர்ஷன் இராமானுஜம்-

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles