இந்து மக்கள் ஆன்மீக அடிப்படையில் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளிப் பண்டிகையும் முக்கியமானதாகும். ஆகவே அப்பண்டிகை சிறப்புற அமைவதற்கு மதுபான வகைகள் தடைகளாக அமைந்துவிடக் கூடாது. ஆகையினால் அதனை முன்னிலைப்படுத்தி பதுளை மாவட்டத்தின் அனைத்து மதுபான வகைகள் விற்பனைசெய்யும் நிலையங்களை எதிர்வரும் 14ந் திகதி மூடிவிடும்படி பதுளை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் கேட்டுள்ளார்.
கொழும்பு – இராஜகிரியவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றிலேயே அரவிந்குமார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
“கடந்த வருடங்களிலும் எனது கோரிக்கையினை ஏற்று தீபாவளி தினங்களில் பதுளை மாவட்டத்தில் மதுபான வகைகள் விற்பனைசெய்யும் நிலையங்களை மூடியமைக்கு எனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை தீபாவளிப் பண்டிகை இருந்துவருவதினால் அன்றைய தினம் பதுளை மாவட்டத்தின் மகியங்கனை, ரிதிமாலியத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைத்தவிர்த்து ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளின் மதுபான வகைகள் விற்பனைசெய்யும் நிலையங்களைமூடிவிடும்படிகேட்டுக்கொள்கின்றேன்.
மேற்குறிப்பிட்ட மகியங்கனை, ரிதிமாலியத்தை பிரதேசசெயலகப் பிரிவுகளில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு அப்பிரிவுகளில் இந்து மக்கள் இல்லாதுள்ளனர். அவ்விருபிரதேசசெயலகப் பிரிவுகளைத் தவிர்த்து ஏனைய பிரதேசசெயலகப் பிரிவுகளில் இந்துமக்கள் கூடுதலாகவாழ்ந்துவருவதினால் அவர்கள் தீபாவளிப் பண்டிகையைவெகுவிசேடமாகக் கொண்டுவர்.
இப்பண்டிகையானது ஆன்மீக ரீதியிலும் குடும்பத்தினரதும் உறவினர்களதும் ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தையும் வலியுறுத்துவதிலும் முதன்மை இடத்தைப் பெறுகின்றது.
இந்நிலையில் அப்பண்டிகையில் மதுபான வகைகள் பாவிக்கப்படும் போது ஆன்மீகம், ஒற்றுமை, ஐக்கியம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுவிடும். அமைதியானசூழலுக்கும் இடையூறாகஅமைந்துவிடும்.
ஆகையினால் குறிப்பிட்ட தீபாவளிதினத்தன்று பதுளை மாவட்டத்தின் மதுபான வகைகள் விற்பனை செய்வதை தடைசெய்யும் பொருட்டு அவ் விற்பனைநிலையங்களை மூடிவிடநடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள் பதுளை மாவட்ட அரச அதிபர் மற்றும் ஊவாமாகாணகலால் திணைக்களபிரதிஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
எம். செல்வராஜா, பதுளை