இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 11 லட்சம் மக்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் மது பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையின் பிரகாரம் தெரியவந்துள்ளதாக மருந்தக கட்டுப்பாட்டு நிறுவனத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய மதுபாவனையில் இரத்தினபுரி மாவட்டம் நான்காவது இடத்தில் உள்ளதாக இந்த நிறுவனத்தின் சப்ரகமுவ மாகாண வெளி சேவை அதிகாரி திருமதி சானிகா அபேசிங்க தெரிவித்தார்.
இந்த ஆய்வு அறிக்கையின் பிரகாரம் இரத்தினபுரி மாவட்டத்தில் மதுபாவனையில் 197,623 நபர்கள் உள்ளதுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் சிகரெட் பாவனை செய்யும் நபர்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது ஆறாவது இடத்தில் அவர்கள் உள்ளதாக தெரிவித்தார்.
மேற்படி தகவல்களை அண்மையில் இடம்பெற்ற இரத்தினபுரி மாவட்ட இணைப்பு கமிட்டி கூட்டத்தில் அவர் வெளியிட்டார். சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகில சாலிய எல்லாவல ஆகியோரின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலினி லொகுபோதாகம தலைமையில் இந்த கமிட்டி கூட்டம் மாதந்தோறும் நடைபெற்று வருகின்றது.
அதேசமயம் சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களத்தின் கீழ் உள்ள தற்பொழுது மூடப்பட்டுள்ள நிவித்திகல நொரகொல்ல வித்தியாலயத்திற்கு உரிய கட்டடங்களும் காணியும் இவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மத்திய நிலையமாக இனம் காணப்பட்டுள்ளதாக சானிகா அபேசிங்க இணைப்பு கமிட்டி கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.