மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு விமல் வீரவன்ச தலைமையிலான ‘உத்தர லங்கா’ சபாகய அணி கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமையை இதற்காக ஒதுக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், மேற்படி அணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் கூடியது. இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கம்மன்பில,
” மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை இலங்கைக்கும் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். லட்சக்கணக்கான இலங்கையர்கள் அங்கு வாழ்கின்றனர். தேயிலை உட்பட ஏற்றுமதி நடவடிக்கை பாதிக்கப்படும். எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு விலை உயர்வு உள்ளிட்டவையால் வாழ்க்கை சுமை அதிகரிப்பும் ஏற்படும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிநாட்டு முதலீடு, சுற்றுலா என சகல துறைகளிலும் இப்பிரச்சினை தாக்கம் செலுத்தும்.
எனவே, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை இலங்கைக்கு எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது தொடர்பில் வியாழக்கிழமை விவாதம் நடத்த அனுமதி வேண்டும். வியாழக்கிழமை நிறைவேற்றப்படவிருந்த விடயங்களை விவாதமின்றி நிறைவேற்றி, அந்நாளை இதற்காக ஒதுக்க வேண்டும்.” – என்று கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதிலளித்தார்.
