மத்திய மாகாணத்தில் 1, 385 அரச ஊழியர்களுக்கு இடமாற்றம்!

மத்திய மாகாணத்தில், அரச சேவையில் ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒரே நிலையத்தில் பணியாற்றிய 1, 385 பேருக்கு இடமாற்றம் வழங்க மத்திய மாகாண சபையின் அரச சேவை ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

மத்திய மாகாணத்திற்குரிய திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் பலவற்றில் ஐந்து ஆண்டுகளுக்கு அதிக காலமாக பணியாற்றிய 734 முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் 651 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இவ்வாறு இடமாற்றம் பெறவுள்ளதாக,மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு தெரிவித்தது.

மார்ச் மாதம் (15) முதல் இந்த இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளன. எனவே, இடமாற்ற உத்தரவு பெற்ற உத்தியோகத்தர்கள், மார்ச் (14) தற்போது பணியாற்றும் நிறுவனங்களிலிருந்து விடுவிக்கப்படுவது கட்டாயமென,மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளர் டீ.ஏ.டி.எம்.தயானந்த தெரிவித்துள்ளார்.

இடமாற்றம் பெறுபவர்களின் பெயர்ப்பட்டியலை மாகாண அரசசேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம், மாகாண செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றும் 48 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே நிலையத்தில் 15 ஆண்டுகளுக்கு அதிக காலம் பணியாற்றியவர்களும் இந்த இடமாற்றத்துக்குள் உள்ளடங்குகின்றனர்.

இடமாற்றம் பெற்றுள்ளவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் பல்வேறு நோய்களைத் தெரிவித்து தமது இடமாற்றங்களை இரத்துச் செய்து கொள்வதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் இவர்கள் முன் வைக்கும் இவ்வறான வைத்திய அறிக்கைகளை நோக்கும் போது மத்திய மாகாண அரச சேவையாளர்கள் பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிவதாக தெரிவிக்கும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே இவ்வாறு பல்வேறு காரணங்களை முன் வைத்து இடமாற்றங்களை இரத்துச் செய்வதற்கு முயலாமல் மாகாணத்தில் இடமாற்றக் கொள்கையை உரியவாறு செயற்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு அனைத்து பணியாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles