மத்திய மாகாணத்தில் 8 மாதங்களில் 11 பெண்கள் கொலை – 12 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு!

இவ்வருடத்தின் முதல் 08 மாத காலப் பகுதியில் மத்திய மாகாணத்தில் 11 பெண்கள் கொலை செய்யப் பட்டிருப்பதுடன் குறித்த அதே 08 மாத காலத்தில் 94 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவாகியிருப்பதாக மத்திய மாகாண சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ் வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையிலான முதல் 08 மாத காலத்தில் இச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக மத்திய மாகாண சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவிற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அதிகாரி திருமதி ஜானகி செனவிரத்ன இத் தகவல்களைத் வெளியிட்டார்.

குறித்த 08 மாத காலத்தினுள் சிறுவர்களைத் தாக்கிக் காயப்படுத்திய 27 சம்பவங்கள் மத்திய மாகாணத்தில் பதிவாகியுள்ளன.மாத்தளை பொலிஸ் பிரிவில் சிறுவர்களை தாக்கிக் காயப்படுத்திய சம்பவங்கள் 09மும், கண்டி பொலிஸ் பிரிவில் 08 உம் பதிவாகியிருக்கும் நிலையில், கம்பளை பொலிஸ் பிரிவில் அத்தகைய சம்பவங்கள் எதுவும் பதிவாகாமை விசேட அம்சமாகும்.

இக்காலப் பகுதியில் பெண்கள் மீதான 12 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதே காலப் பகுதியில் 11 பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பதுடன் இவற்றில் 04 கொலைச் சம்பவங்கள் நுவரெலியா பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளன. கண்டி பொலிஸ் பிரிவில் பெண்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் 04 பதிவாகியுள்ளன.

இவை இவ்வாறிருக்க,கொவிட் வைரஸ் பரவல் நிலை காரணமாக பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் என்பன இடம் பெறாதிருந்த பின்னணியில் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு இலக்கான சம்பவங்கள் பெற்றார்களின் பாதுகாப்பில் பிள்ளைகள் இருந்த காலத்தில் என்பதையும் இது தொடர்பில் பெற்றார்கள் விசேட கவனம் செலுத்துதல் அவசியம்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பலரிடம் இவ் விவகாரம் தொடர்பில் வினவிய போது அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோரிடம் தொலைப்பேசி வசதிகள் எதுவும் இல்லாதிருந்தமை தெரிய வந்ததாகவும், துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுவர் மற்றும் சிறுமிகள் பலரும் பாதிக்கப்பட்டிருப்பது அவர்கள் தமது தாய் அல்லது தந்தையின் தொலைப் பேசிகளின் மூலம் வெளி நபர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகளின் மூலம் என்பது தெரிய வந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles