மத்திய வங்கி நிதி வங்குரோத்து நிலையை அறிவித்ததனால் முழு நாடும் தோல்வியடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து நாடாளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான நாடாளுமன்ற விசேட குழு கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் 2022 செப்டம்பர் 01 மற்றும் 2023 பெப்ரவரி 10 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் இதன்போது வினவப்பட்டது.
அவ்வேளையில் கருத்துத் தெரிவித்த வஜிர அபேவர்தன குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் பிரகாரம் நிதிக் கட்டுப்பாடு நாடாளுமன்றத்துக்கு காணப்படுவதாகவும் பிழையான முறையொன்றுக்கு அமைய 202.04.12 ஆம் திகதி மத்திய வங்கியினால் இந்நாட்டில் நிதி வங்குரோத்து நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதனால் முழு நாடும் அசௌகரியத்துக்குட்பட்டதாக அவர் தெரிவித்தார்.
விசேடமாக 2022 இல் முதலாவது காலாண்டில் 3.9 பில்லியன் டொலர் செலுத்த வேண்டி இருந்ததாகவும், 2022 ஏப்ரல் 08 இல் 3.2 பில்லியன் டொலர் செலுத்தியிருந்ததுடன் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, ஏப்ரல் 12 வரை சுமார் 70 மில்லியன் டொலர் சீனாவுக்கு செலுத்தவேண்டி இருந்ததாகவும், இந்த நிலையில், ஏப்ரல் 12 இல் எந்தவொரு விபரமும் இல்லாமல் மத்திய வங்கியினால் நிதி வங்குரோத்து நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இது பிழையான செயற்பாடு எனவும், இது நடந்திருக்கக் கூடாது எனவும், அந்த நிலையில் தனியாரின் உதவியுடன் அந்தக் கடனை செலுத்த முடியுமாக இருந்ததாகப் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இதனால், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்திய வங்கியின் அதிகளவான அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஒரு சிலர் இந்த நிலையில் இலங்கைக்கு சார்பாக இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.










