அல் குர்ஆனுக்கு தீவைத்தது, இஸ்லாத்தின் இறைத்துதரை அவமதித்த குற்றச்சாட்டில் ஈரானில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட யூசப் மஹரத் மற்றும் சத்ருல்லா பசாலி சாரா என்ற இருவரும் நாத்திக பிரசாரம் மற்றும் புனிதங்களை இழிவுபடுத்தும் வகையில் பல சமூக ஊடகங்களை நடத்தி வந்ததாக நீதித்துறையின் மீசான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மஹ்தியின் சட்டத்தரணி, அவர் அப்பாவி என்றும் அவர் மீதான தண்டனை அநீதியானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை “மத்திய கால அரசு ஒன்றின் கொடூரச் செயல்” என்று இந்த மரண தண்டனைகளை உரிமைக் குழு ஒன்று சாடியுள்ளது.
ஈரானில் அரச எதிர்ப்பு பதற்ற சூழலுக்கு மத்தியில் அந்நாட்டில் மரண தண்டனை வழங்குவது அதிகரித்தபோதும் மத நிந்தனை குற்றச்சாட்டில் மரண தண்டனை வழங்கப்படுவது அரிதானதாக உள்ளது.
மத்திய ஈரானில் உள்ள அரக் சிறைச்சாலையில் இந்த இருவரும் கடந்த திங்கட்கிழமை (08) தூக்கிலிடப்பட்டதாக மீசான் செய்தி வெளியிட்டுள்ளது.
மதத்தை இழிவுபடுத்தும் வகையில் டெலிகிராம் சமூக தளம் ஒன்றை நடத்திய குற்றச்சாட்டில் 2020 ஆம் ஆண்டிலேயே இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். முதல் இரு மாதங்களும் தனிமைச் சிறையில் வைக்கப்பட்ட இந்த இருவரும் சட்டத்தரணிகளை அணுகுவதற்கு தடை விதிக்கப்பட்டதாக ஈரானின் மனித உரிமை குழு ஒன்று குறிப்பிட்டது.










