” ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ள விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆராய்ந்து, அவ்வறிக்கையில் முக்கிய பரிந்துரைகள் இருக்குமானால் அவை ஏற்றுக்கொள்ளப்படும்.” – என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவானது காலத்தை கடந்தும் பொறிமுறை அல்ல என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மனித உரிமை விவகாரம் தொடர்பில் கடந்தகாலங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. ஆராய்வதற்கென குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகளை எடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஆராயும். பரிந்துரைகளும் கவனத்தில் கோள்ளப்படும்.
இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் நிறைவேற்றப்பட்ட விடயங்கள் எவை, நிறைவேற்றப்படாத விடயங்கள் எவை, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் எவை என்பது தொடர்பில் ஆராயப்பட்டு பரிந்துரை அறிக்கை முன்வைக்கப்படும்.
அதுமட்டுமல்ல ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் விமர்சனங்கள் இருந்தாலும், அவ்வறிக்கையிலுள்ள விடயங்களும் ஆராயப்பட்டு, முக்கியமான விடயங்கள் இருப்பின் அவற்றை நாம் ஏற்கவேண்டும். ஏனெனில் சர்வதேச சமூகம் இதனையே எதிர்ப்பார்க்கின்றது.
காலத்தை கடந்தும் நோக்கில் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை. காலம் கடந்தேனும் உண்மையான நோக்கிலேயே அக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.” – என்றார்.










