மனோவின் பார்வையில் ‘சொப்பன சுந்தரி’ எப்படி?

இலங்கையர்களின் படைப்பில் வெளியாகியுள்ள ‘சொப்பன சுந்தரி’ படம் குறித்து, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசின், தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள திரை விமர்சனம் வருமாறு,

பெயர் தலைப்பு தரும் கிளுகிளுப்பினால், “பார்க்க வேண்டும்” என்றும், “குடும்பத்துடன் பார்க்க முடியுமோ” என்றும் யோசிக்கும் ரசிகர்களுக்கு, “அதெல்லாம் ஒன்றுமில்லை. நல்ல ஒரு நகைச்சுவை சினிமா, கட்டாயம் பாருங்கள்” என்பேன்.

க்ரைம், போதைவஸ்து விவகாரம்.. இரண்டையும் அடிப்படையாக கொண்ட கதை வன்-லைன். அப்புறம் திரைக்கதை நகைச்சுவையில் மூழ்கி முத்தெடுத்து ஓடுகிறது.

என் பக்கத்தில் இருந்த இரண்டு விசேட அழைப்பு எம்பிக்கள் வேலைப்பணி காரணமாக எழுந்து போனார்கள். வேலை இருந்தும், நான் இறுதிவரை இருந்து ரசித்தேன். என்னைவிட மகேஷ் கடைசி பிரேம்வரை ரசித்தார்.

கடைசி வரை அலுப்பு தட்டாமல் -ஓரிரு இடங்களை தவிர- கூட்டி செல்லும் ஜாலியான திரைக்கதை. அந்த ஓரிரு இடங்கள், முதல்ல லேடி RJ அமர்ந்து “போதைவஸ்து” தொடர்பில் பேட்டி காண்கிறாரே,

அப்போது அலுப்பு தரும் “டொக்குமன்ட்ரி” பட சாடை வந்தது. யாரோ, என்ஜிவோகாரர் முதலீடு செய்துவிட்டு, இதை காட்டி கூறியே ஆகவேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்களோ என பயந்துட்டேன். நல்லவேளை நம்ம RJ யின் குரல் அலுப்பை கொஞ்சம் குறைத்தது. படம் ஏற்கனவே நீளம் கொஞ்சம் அதிகம். இதை எடிட்டிங்கில் நீக்கி இருக்கலாம்.

திரைக்கதை அமைப்பில், காட்சி வரிசைப்படுத்தலில், இன்னும் கொஞ்சம் அக்கறை காட்டி இருக்கலாமோ என தோணுது. சில இடங்களில் படம் ஓடும் பொழுது நமது மனம் கூட ஓட மறுத்து, கதையை விளங்கிக்கொள்ள தாமதிக்குது. இது இயக்குனரின் கட்டாய கவனத்துக்கு.
சினிமா நடிப்பில் “குறை அனுபவம் மற்றும் அமெச்சூர்” என்ற வரையறைகளை எல்லாம் கடந்த, -ஓரிரு துணை நடிகர்களை தவிர – பாத்திரம் உணர்ந்த சிறப்பான நடிப்பு

முதலில், அந்த “நார்கோடிக்” பொலிஸ்காரர் களை கட்டினார். இவரது வேகம் அபாரம். ஆனால், கதையில் அவருக்கு இடம் குறைய, குறைய, பிறகு நோ சான்ஸ், அந்த மூன்று கில்லாடி பசங்களுக்கும் பரிசு. முக பாவனைகள், அங்க சைகைகள், வசன டெலிவரிகள், இயல்பாக வெளுத்து கட்டுகிறார்கள், அசங்க! (அசத்தும் பசங்கள் என்பதால் அசங்க !)

“சினிமா என்றால் வானொலி நாடகம் இல்லை, அது விஷுவல் கலை” என்பது பட இயக்குனர் மாதவனுக்கு நல்லா தெரிந்திருக்கு என்பதை நான் நன்கு உணர்ந்தேன். பாராட்டுகள்! அப்புறம் ஏம்பா, சில இடங்களில் சில பாத்திரங்கள் அளவுக்கு அதிகமாக வசனம் பேசுகிறார்கள், பழைய கேஎஸ் கோபாலகிருஷ்ணன் படம் மாதிரி..? அது மேடை-வானொலி நாடக பீலிங்கை சில இடங்களில் கொண்டு வருகிறது.

பாடல் இசை…, ஒன்று சொந்த பாடல்கள் (அனிருத்+சந்தோஷ் நாராயணன் கலந்த வாடை!) சிறப்பு. அப்புறம் கடன் வாங்கிய பாடல்களை பயன்படுத்திய டைமிங்ஸ், சிறப்போ சிறப்பு.
ஏம்பா உங்கள் நடிப்பு, முக உடல் பாவனைகள், காமடி வசனம், நல்லாத்தானே போவுது, அப்புறம் என்ன? ஏன் அந்த, ஸ்க்ரூ டிரைவரை கையில் வைத்துக்கொண்டு ஆஆபாச வசனம்..? 2K கிட்ஸ்சை கவரவா? அவர்கள் அதெல்லாம் கடந்து விட்டார்கள் Bros.
படப்பிடிப்பு, கமரா நகர்வுகள், ஃப்ரேமிங், ரீ-ரெகார்டிங், எடிட்டிங்… சமாச்சாரங்கள் அனுபவசாலிகளுக்கு சவால் விடுமளவுக்கு அத்துப்படி.
உங்க சொப்பன சுந்தரிக்கு, கதையிலும்,

திரைக்கதையிலும் சான்ஸ் குறைவு. ஆனாலும் சொப்பன சுந்தரி பெயர் ஒரு “கெட்சிங் கிளுகிளுப்பு” க்காக என புரிகிறது. ஆனாலும் வேறு கெட்சிங் பெயர் வைத்திருக்கலாம் என தோணுது. அந்த மூன்று கில்லாடி பசங்களை சுற்றி ஓடுவதால், , தமிழில் வந்த “நண்பர்கள்” படத்தின் ஹிந்தி பெயர் “த்ரீ இடியட்ஸ்” மாதிரி ஏதாவது யோசித்தால் வராமலா போயிருக்கும்? அல்லது “சொப்பன சுந்தரி லைட்டேத்தான் வேணும்” என்றால், “நடுவில ஒரு பக்கத்த காணல” மாதிரி வசன டைட்டில் ஏதும், “சொப்பன சுந்தரியும், ….” என போட்டிருக்கலாம் என தோணுது.

கடைசியா இவர்கள் நம்ம பசங்க..! அதற்காக பாருங்கள் என்றால், ஏதோ “லோக்கல் படம், பார்த்து தர்மம் பண்ணுங்க, சாமி”, என்பது போல் ஆகிடும். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. சிறப்பாக முயற்சி செய்து படம் செய்துள்ளார்கள். அசகாய சென்னை கோலிவுட் படங்கள் சில பார்க்க போய் இடையில் எழுந்து வந்துள்ளேன். இதில் இறுதிவரை பார்த்தேன். வீட்டில் குழந்தைகளையும், அழைத்து போனால், வாய் விட்டு சிரிப்பார்கள்.

அரசியலில் அகப்பட்டு அவதியுறுகிறேன். அரசியலுக்கு முன் சினிமாதான் என் (முதல்) காதல். ஆகவே சொல்லவா வேண்டும். நம்ம சினிமா இளையோரை வாழ்த்துகிறேன்.

இன்னும் எழுதலாம். சில மணிகளில், நாடு கடந்து போகிறேன். போகுமுன் முடிக்க வேண்டிய பணிப்பளு மிரட்டுகிறது. நன்றி.

Related Articles

Latest Articles