மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குச் சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தித் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
காற்றாலை மின்னுற்பத்தித் திட்ட விவகாரம் தொடர்பில் இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சில் ஈடுபடுபதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் மற்றும் இல்மனைட் கனிய வளம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை விசேட கலந்துரையாடல் மின்சாரத்துறை அமைச்சர் அருண கருணாதிலக தலைமையில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு உட்பட பல்வேறு தரப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்தர்ப்பத்தின் போது மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தால் மன்னார் மாவட்ட மனித மற்றும் இயற்கை வாழிடங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டது. திட்டத்தின் ஆரம்பப் பணிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மன்னார் மாவட்ட சிவில் பிரஜைகள் இதன்போது எடுத்துரைத்தனர்.
காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் குறித்து சகல தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கும், அதுவரையில் இந்தத் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கும் மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இந்த விடயம் குறித்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கும் இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.
மின்னுற்பத்தித் திட்டப் பணிகளுக்கான பொருத்தல் உபகரணங்களை மன்னார் தீவுக்குள் கொண்டு செல்லாமல் அவற்றைப் பிறிதொரு இடத்தில் பாதுகாப்பாக வைப்பற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
