கடும் காற்றுடன்கூடிய அடைமழையால் அட்டன், டிக்கோயா மாணிக்கவத்த 2 ஆம் பிரிவில் நேற்றிரவு 11 மணியளவில் பாரிய மரமொன்று மின் இணைப்புகள்மீது முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 105 குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல பகுதிகளிலும் சீரற்றகாலநிலை நிலவிவருகின்றது. மலைநாட்டிலும் கடும் காற்றுடன் அடைமழை பெய்துவருகின்றது. இந்நிலையில் நேற்றிரவு அட்டன், டிக்கோயா பகுதிகளில் கடும் காற்று வீசியுள்ளது.
காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் மாணிக்கவத்த 2ஆம் பிரிவிலுள்ள மரமொன்று முறிந்து, மின் இணைப்பை வழங்கும் கம்பம்மீது விழுந்துள்ளது. இதனால் மின் கம்பிகள் எல்லாம் அறுந்து வீதியில் விழுந்துள்ளன. ஏனைய சில மின்சம்பங்களும் சரிந்துள்ளன.
இது தொடர்பில் கினிகத்தேன மின்சார சபைக்கு அறிவித்தும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்ல என ஊர் மக்கள் தெரிவிக்கன்றனர்.
மின்கம்பங்கள் உடைந்துவிழும் அபாயம் இருப்பதால் ‘கொங்றீட்’ தூண்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தோட்ட மக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். ஆனாலும் நெடு நாட்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் தற்போது கொங்றீட் மின் கம்பங்கள் கொண்டுவரப்பட்டிருந்தாலும் அவற்றை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
க.கிசாந்தன்