இலங்கையில் வைத்தியசாலைகளில் இடநெருக்கடியும் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால் எதிர்வரும் நாட்களில் கொவிட் மரணங்கள் வெகுவாக அதிகரிக்கும் என்றும் இதனைத் தடுத்து நிறுத்த உடனடியாக செயற்பட வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை சந்தித்து பேசியபோது இதனைத் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கமைய இந்த சந்திப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கொவிட் நெருக்கடியை சமாளிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முன்வைத்த யோசனையை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள், சபாநாயகர், பிரதமர், சுகாதார அதிகாரிகள் ஆகியோரை இணைத்து ஒருங்கிணைந்த படையணியொன்றை உருவாக்கி, இதுகுறித்து தீவிரமாக செயற்பட வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளார்.
இதற்கு எவ்வித பதிலையும் ஜனாதிபதி வழங்காத போதிலும், சாதகமான சமிக்ஞைகள் கிடைத்ததாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
