மலையகத்தில் அராஜக அரசியலுக்கு இனி இடமில்லை!

“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டுமென மலையக பிரதிநிதி என்ற ரீதியில் நாங்களும் அழுத்தத்தை பிரயோகித்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் தாம் மட்டும் தான் மலையகத்தின் மீதும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் மீதும் அக்கறை இருப்பது போல் மமதையில் செயற்படுவது எவ்விதத்திலும் நியாயம் கிடையாது.

அதே சந்தர்ப்பத்தில் ஏனைய மக்கள் பிரதிநிதிகளையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அராஜக அரசியலெல்லாம் எப்பொழுதோ மலையேறி சென்று விட்டது. மீண்டும் அதை தலைதூக்க ஒரு சிலர் முயற்சித்து வருவதை போல் தெரிகின்றது. காரணம் சம்பள போராட்டத்தின் போது புஸல்லாவையில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணி உபதலைவருமான வேலுக்குமார் தாக்க முற்பட்டமை ஒரு அநாகரிகமான செயல் ஆகும்.”

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்

“ தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் செய்கின்ற போது ஏனைய தொழிற்சங்கங்களையும் மதிக்க வேண்டும். அவர்களையும் இணைத்து கொண்டு செல்ல வேண்டும். சம்பளம் விடயம் பேசும் போது எங்களோடு வாருங்கள்,ஒன்றாக சேர்ந்து போராடுவோம் என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் போராட்டம் சமயத்தில் வேறு தொழிற்சங்கவாதிகள் சென்றால் அவர்களை அநாகரிகமாக பேசுவதும் தாக்க முற்படுவதுமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இப்படி இருக்கையில் எவ்வாறு ஒன்றாக பயணிக்க முடியும்? ஒரு பக்கம் ஒன்றாக பயணிப்போம் என்கின்றனர், மறுபக்கம் அநாகரிகமான முறையில் நடந்து கொள்கின்றர்.” – என்றார்.

நீலமேகம் பிரசாந்த்

 

Related Articles

Latest Articles