“நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் ஏற்கனவே 105 கிராம சேவையாளர் பிரிவுகள் இனங்காணப்பட்டு அதில் தமிழர்களே கிராம உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது அந்த நிலைமை மாற்றி தமிழ் மொழி தெரியாத பெரும்பான்மை சிங்களவர்கள் கிராம உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இது மலையக மக்களின் ஆரம்ப அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் விடயமாகும்.”
இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
“ முன்னாள் அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் நுவரெலிய பதுளை மாவட்டங்களில் 105 கிராம சேவையாளர் பிரிவுகள் தமிழர்கள் வாழுகின்ற பிரதேசமாக இனம் கண்டு அதற்கு தனியான போட்டி பரீட்சை மூலம் மலையகத் தமிழர்கள் கிராம சேவையாளர்களாக நியமிக்கப்பட்டனர். முதற்கட்டமாக அது நியமிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் ஏனைய மாவட்டங்களுக்கும் அது விஸ்தரிக்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது தமிழர்கள் கிராம சேவைகளாக நியமிக்கப்பட்ட பிரதேசங்கள் கூட கட்டம் கட்டமாக ஒழிக்கப்பட்டு மொழி தெரியாத பெரும்பான்மை இனத்தவர்கள் கிராம உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படுகின்றனர். இது மலையக மக்களின் ஆரம்ப அரசியல் உரிமைகளை பறிக்கின்ற செயலாகும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அந்தந்த பிரதேச மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களின் மொழியையும் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
ஆனால் தற்போது மலையகத்தில் தமிழ் மொழி தெரியாத பெரும்பான்மை இனத்தவர்களை கிராம உத்தியோகத்தர்களாக நியமிப்பதால் மலையக மக்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகின்றனர். இந்த நாட்டின் பிரஜைகளான மலையக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் எவ்வாறு அவர்களை தேசிய நீரோட்டத்தில் இந்த நாடு உள்வாங்க போகிறது?
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடைமுறை அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்தாலும் மலையக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற விடயங்களை கண்டும் காணாமல் இருக்க முடியாது? மலையக மக்கள் எங்கெங்கு எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை அரசாங்கத்தின் உயர் மட்டத்துக்கு கொண்டு சென்று அதற்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதே எமது நோக்கமாகும். அந்த வகையில் வெற்றிடமாக உள்ள கிராம சேகவர் பிரிவுகளில் , குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு விரைவில் நியமனம் பெற இருக்கின்ற கிராம சேவையாளர் நியமனத்தின் போது தமிழர்கள் நியமிக்கப்பட வேண்டும். என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
மலையக மக்களுக்கு நாட்டில் ஏனைய இனங்களுக்கு நிகரான உரிமைகளை வழங்கி அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதே பிரதான இலக்கு என நாம் 200 நிகழ்வுகளில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதற்கான செயற்பாட்டு குழு ஒன்றை நியமிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மலையக பிரதேசங்களுக்கு கிராம சேவையாளர்களை நியமிக்கும் போது மலையகத்தில் கடந்த கால நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவின் மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளும் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக மலையக மக்களின் மனங்களில் வெறுப்பை விதைக்க கூடாது எனவும் கணபதி கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.










