மலையகப் பெருந்தோட்ட பிரதேச கல்வியில் தலையீடு செய்து அதன் மூலம் தமிழர்கள் , முஸ்லிம்களிடையே இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் சிலருடைய நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகவும் அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
” மலையக பெருதோட்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கு கல்விகற்கும் உரிமை இருக்கிறது. அதேபோல அந்தப் பிரதேசத்தில் ஏற்படும் ஆசிரியர் வெற்றிடங்களை அந்தப் பிரதேசத்தை சார்ந்தவர்களுக்கு வழங்குவதே தார்மீகமாகும்.
மிகவும் நழிவடைந்த ஒரு சமூகத்துக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை தட்டிப்பறித்து இன்னொரு சிறுபான்மை சமூகம் அனுபவிக்க முற்படுவது பிச்சைக்காரனிடம் தட்டிப் பறித்து உண்பதற்கு சமனான செயலாகும்.
இலங்கை வாழுகின்ற முஸ்லிம் சமூகம் மலையக சமூகத்தை விட கல்வித்துறையில் வளர்ந்தவர்களாக காணப்படுகிறார்கள். போட்டிகள் என்று ஏற்படுகின்ற போது மலையக இளைஞர்களை முந்திக்கொண்டு பதவிகளைப் பெற்றுக் கொள்ளுகின்ற வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. இவ்வாறு நலிவடைந்த சமூகத்தின் வாய்ப்புகளை தட்டிப் பறித்துக் கொள்வது மனிதாபிமான செயலாகுமா?
அண்மையில் மத்திய மாகாணத்தில் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமனங்களில் பெருமளவிலான முஸ்லிம் பட்டதாரிகளே மலையகத் தோட்டப்புற பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றனர். எனினும் இவர்களில் பலர் வந்த உடனேயே தங்களுடைய சொந்தப் பிரதேசத்துக்கு இடமாற்றம் பெற்று செல்வதற்கான நுட்பங்களை தேடிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் இணைப்பு இடமாற்றம் பெற்றிருக்கின்றார்கள். இது ஒரு வகையில் எமது மலையக தமிழ் சமூகத்தில் இருந்து வந்த பட்டதாரிகளின் வாய்ப்புகளை பறித்தெடுப்பது மட்டுமல்லாமல் அப்பாவி தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வியில் கை வைப்பதும் ஆகும்.
மத்திய மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனங்களின் போது மலையகத் தோட்டப்புறங்களை சார்ந்த இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர்கள் தொடர்ந்தும் வேலையற்ற பட்டதாரிகள் பட்டியலிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. சகோதர சமூகம் என்ற வகையில் முஸ்லிம் சமூகம் எமது இளைஞர்களின் நிலைமையை சீர் தூக்கி பார்க்க வேண்டும்.
கடந்த காலங்களில் ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்கள் நிரந்தர ஆசிரியர் நியமனத்துக்காக பத்தாயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டு நிரந்தர நியமனத்திற்காக 10 வருடங்கள் காத்திருக்க வேண்டி யேற்பட்டது. அதேபோல தற்போதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் படித்த பிள்ளைகளுக்கு கிடைக்கின்ற ஒரே ஒரு தொழில் வாய்ப்பு உதவி ஆசிரியர் நியமனமாகும் . அதிலும் கை வைத்து தட்டிப் பறிப்பதற்கு சகோதர முஸ்லிம் சமூகத்தவர்கள் முனைய கூடாது. இது மிகவும் அன்னியோன்யமாக வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுகளில் மனம் முடிவை ஏற்படுத்தும் .” – எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.