” இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வீடமைப்புத்திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும்போது இலங்கையின் ஏனைய மக்களுக்குச் சிக்கல்கள் இன்றி நிறைவுபெறும்போது மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்குவதில் இழுபறி நிலை காணப்படுகின்றது. இதற்கு காரணம் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை இல்லாமையாகும். எனவே பெருந்தோட்ட வீடமைப்புக்கு இந்தியா நிதியுதவி வழங்கும் போது இலங்கை அரசு அதற்கான காணி உரித்தினை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ‘இலங்கை – இந்திய வீடமைப்புத் திட்டமாக’ மாற்றியமைக்கப்படல் வேண்டும் என மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஆரம்பிக்கபட்டுள்ள மலையகத்துக்கான இந்திய வீடமைப்புத்திட்டத்தின் நான்காம் கட்டமான 2000 வீடுகளை அமைப்பதற்காக பண்டராவளையில் இடம்பெற்ற நிகழ்வில் மக்களுக்கு வழங்கப்பட்ட ஆவணம் தொடர்பில் எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து மலையக அரசியல் வெளியிட்டு இருக்கும் அறிக்கையிலேயே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் வீடமைப்புத் திட்டங்களுக்காக இந்திய அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளுககாக முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால், அத்தகைய உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் இலங்கை அரசு அதற்கு சமாந்திரமான பங்களிப்பை வழங்கும்போதே அது மக்களுக்கு உண்மையான பயனைப் பெற்றுக்கொடுப்பதாக அமையும். பண்டாரவளையில் வழங்கிவைக்ப்பட்ட ஆவணத்தில் ‘இலங்கை அரசின் ஆதவுடன் இந்திய அரசின் பூரண நிதிப்பங்களிப்புடன்’ என தடித்த எழுத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டாயிரம் வீடுகளுக்கு இலங்கை அரசு வழங்கிய ஆதரவு என்ன ? எனும் கேள்வியே இங்கு எழுகின்றது. மேற்படி வீடமைப்புத் திட்டத்துக்காக இந்தியா முழுமையான நிதிப்பங்களிப்பை வழங்கும்போது இலங்கை அரசே அதற்கான காணியினை வழங்க வேண்டும்.
அதனை உறுதி செய்து அமைச்சரவைத் தீர்மானத்தை எடுத்து இந்திய வீடமைத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்க காணி உரித்தினை வழங்கவெண்டிய இலங்கை அரசு வெறுமனே ஆதரவு வழங்குகிறோம் என இந்திய வீடமைப்புத் திட்டத்தில் வீடுகளை உறுதி செய்யும் கடிதங்களைக் கொடுப்பது ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்த்தின் நடிவடிக்கை அல்ல.
நல்லாட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்திய வீடமைப்புத்திட்ட பயனாளிகளுக்கு ‘சின்னக்கர ஒப்பு’ என சொல்லப்படும் காணி உறுதிகள் அப்போதைய காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் வழங்கிவைக்கப்பட்டன. பண்டாரவளை விழாவில் தற்போதைய காணி அமைச்சரையே காணவில்லை. மாவட்ட காணி மறுசீரமைப்பு ஆணையாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்பதுகூட தெரியவில்லை. இப்படி துறைக்கு பொறுப்பானவர்கள் இல்லாமல் அரசாங்கம் வழங்கும் ‘ஆதரவு’ தான் என்ன? வீடமைப்பு குறித்து பெருந்தோடட சமூக நலன் பிரதி அமைச்சர் கருத்து கூறினால், அந்த வீடு அமைந்திருக்கும் காணி குறித்து அமைச்சர் லால்காந்தவே பொறுப்பேற்க வேண்டும்.
நல்லாட்சிக் காலத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சர், காணி அமைச்சர், மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் இணைந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் ஊடாகவே காணி உறுதிகள் உறுதி செய்யப்பட்டன. அப்படி ஒரு அமைச்சரவைப்பத்திரம் தற்போதைய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்தாகத் தெரியவில்லை. நல்லாட்சி அரசாஙகத்தின்போது கட்டிமுடிக்க்பட் வீடுகளுக்கு உறுதி வழங்கப்பட்டமை முதல் கட்ட முடிவாகும். ஆப்போது ஒரு உறுதிப்பத்திரம் காணி மறுசீரமைப்பினால் வழங்கப்பட்டுள்ளதால் தற்போதைய அரசாங்கம் அந்த இடத்தல் இருந்து ஆரம்பித்து காணி உறதியை வழங்கி வீடமைப்புத் திட்டததை ஆரம்பித்து வைத்து இருக்கலாம்.
இந்திய அரசாங்கத்தினால் இலங்கையில் 65 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு பூரண நிதியீட்டம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் 14 ஆயிரம் வீடுகள் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு என உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்தத் திட்டத்தில் மலையகத்துக்கு வெளியே வட-கிழக்குத் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட 40 ஆயிரம் வீடுகளும் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட 6 ஆயிரம் வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் மலையகத்தில் இந்தி வீடமைப்பென்பது 14 ஆணடுகள்; இழுபறியாகவே உள்ளது. இலங்கையில் ஏனைய மக்களுக்கு இத்தகைய காணிப்பிரச்சினை இல்லாததால் அவை சிச்கல் இன்றி நிறைவுபெறுகின்றன.
எனவே மலையகத்துக்கான இந்திய வீடமைப்புத் திட்டமானது இலங்கை – இந்திய வீடமைப்புத் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டு இந்தியா பெற்றுக்கொடுக்கும் ஒவ்வொரு வீட்டுக்குமான காணித்துண்டினை அதற்கான உரிமத்துடன் இலங்கை அரசாங்கம் வழங்குதல்; வேண்டும் என புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.