மலையகம் – 200 நிகழ்வுகளில் நிலவுரிமை கோஷம் ஓங்கி ஒலிக்கட்டும்!

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் ‘லயன்’ யுகத்துக்கு முழுமையாக முடிவுகட்ட முடியாமல் இருப்பதற்கு – பெருந்தோட்ட மக்களுக்கு இன்னும் காணி உரிமை கிடைக்காமையும் பிரதான காரணங்களுள் ஒன்றாகும்.

அம்மக்களுக்கு காணி உரிமை கிடைக்கப்பெற்றால் அது – பெருந்தோட்ட மக்களின் வாழ்வியலை
– வாழ்க்கைத் தரத்தை அடுத்தக்கட்டம் நோக்கி நகர்த்துவதற்கான ஆரம்ப புள்ளியாக அமையுமென்பது வெள்ளிடை மலை. ஆக மலையக மறுமலர்ச்சி பற்றி பேசுகையில் ‘காணி உரிமை’க்கே முன்னுரிமையும் – முக்கியத்துவமும் வழங்கப்பட வேண்டும்.

இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் வீடமைப்பு திட்டங்களை முழுமையாக நம்பிக்கொண்டு – அவற்றுக்காக மட்டுமே வழிமீது விழிவைத்து காத்திருந்தால் லயன் யுகத்துக்கு முடிவுகட்ட இன்னும் பல தசாப்தங்கள் செல்லும். அதற்குள் அடுத்த நூற்றாண்டுகூட வந்துவிடலாம்.

எனவே, காணி உரிமையை வழங்கிவிட்டால் முடிந்தவர்கள் வீடுகளை நிர்மாணித்துக்கொள்வார்கள். இலகுக்கடன் திட்டத்தை வழங்கினால் அதன்மூலமும் பலர் பயன் அடைவார்கள். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஈபிஎப், ஈடிஎப் பணத்தை விடுவித்தால் ( அதை விரும்பி – தாமாக முன்வந்து கோருபவர்களுக்கு) அதன்மூலமும்கூட அவர்கள் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ளலாம்.

அத்துடன், விசேட வீடமைப்பு நிதியமொன்றை உருவாக்கினால் அதற்கு தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் நிச்சயம் நிதி உதவிகளை வழங்கும். மலசலக்கூடம் அமைப்பதற்கு குறுகிய காலப்பகுதிக்குள் பல லட்சம் ருபா திரட்டி முடியுமென்றால் – அரச அங்கீகாரத்துடன் நிதியமொன்று நிறுவப்பட்டால் அதற்கு எவ்வளவு பேர் பங்களிப்பார்கள் என்பதை இலகுவாக ஊகித்துக்கொள்ள முடியும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் குறைந்தபட்சம் தமது மூன்று மாத கால சம்பளத்தை அந்த நிதியத்துக்கு வழங்கலாம். தனியார்துறை ஊழியர்கள் தமது ஒரு நாள் சம்பளத்தை தியாகம் செய்யலாம். இலங்கைக்கு எம்மை அழைத்துவந்த பிரிட்டன் மற்றும் அனுப்பி வைத்த இந்தியாவிலும் உதவிகளைக் கோரலாம்.

இலங்கையில் உள்ள அத்தனை இந்து ஆலயங்களினதும் ஒரு மாதத்துக்குரிய உண்டியல் பணத்தை கோரலாம். (கோவில் திருவிழாவுக்கு வெள்ளைக் குதிரையையே லட்சம் கொடுத்து கொண்டுவருபவர்கள், இந்த உதவியை செய்யமாட்டார்களா என்ன ) ஏனைய மதங்களின் வணக்கஸ்தலங்களும் தாமாக முன்வந்து உதவலாம். ஏன் ஐயப்பன், திருப்பதி ஆலய நிர்வாகங்களிடமும் பேச்சு நடத்தலாம். குறைந்தபட்சம் ஒரு நாள் லட்டு வருமானத்தையாவது தரமாட்டார்களா என்ன? இப்படி நிதியத்துக்கு நிதி திரட்ட பல வழிகள் (நடைமுறைக்கு சாத்தியமான) உள்ளன.

வீடமைப்பு பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு கண்டுவிடலாம். ஆனால் எல்லாவற்றுக்கு மேல் முதலில் காணி உரிமை கிடைக்கப்பெற வேண்டும்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை என்பது இரு பிரதான தேசிய கட்சிகளினதும் தேர்தல் கால வாக்குறுதி. தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் அது உள்ளது. அதற்கு மக்களின் அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விசேட சட்டமொன்றை இயற்றியாவது அதனை வழங்க வேண்டியது அரசின் கடப்பாடாகும். வெறுமனே மலையக அரசியல் தலைவர்களை மட்டும் குறைகூறிக்கொண்டிருக்காமல், அதற்காக மக்களும் குரல் கொடுக்க வேண்டும். மக்கள் மத்தியிலும் நிச்சயம் மாற்ற வேண்டும்.
அரசியல்வாதிகள் திருமண வீட்டுக்கு வரவில்லை, மையவீட்டுக்கு வரவில்லை என்பதற்காக அவர்களுடன் முரண்படும் மக்கள், காணி உரிமை பற்றி பேசி, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அது பற்றி கேட்க வேண்டும். அதற்காக கோபமடைய கற்றுக்கொள்ள வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் வீடு அல்ல, கக்கூஸ் கட்டுவதற்கு நிதி கிடைத்தால்கூட, காணி உரிமை இல்லாவிட்டால் அதனை செய்வதற்கு கம்பனிகளிடமே கையேந்த வேண்டிய நிலை உள்ளது.
எம் மக்கள் வளமாக்கிய மண்ணில் முளைத்த ஒரு மரத்தின் கிளையை வெட்டுவதாக இருந்தால்கூட தோட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டும்.

கோவில்களை அமைப்பதற்கு இலகுவில் அனுமதி வழங்குபவர்கள், ஒரு வாசிகசாலையை அமைப்பதற்கு இழுத்தடிப்பார்கள். துணிந்து கட்டினாலும், சட்டத்தின் அனுமதியுடன் இடித்தழிப்பார்கள். அதன் பின்னால் உள்ள சதியையும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, காணி உரிமையை பெறுவதற்கான தேசிய வேலைத்திட்டம் அவசியம். அதற்காக குரல் கொடுப்போம். மலையக – 200 நிகழ்வுகளில் நில உரிமை கோஷம் ஓங்கி ஒலிக்கட்டும்.

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குதான் பெருந்தோட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கிக்கொண்டு, அவர்களை தாழ்த்தப்பட்ட சமூகமாக காண்பிப்பது?

ஓர் இனம் தலைநிமிர 5 சதாப்தங்கள் (50 ஆண்டுகள்) போதும். ஆனால் இங்கு 20 தசாப்தங்கள் (200 வருடங்கள்) கடந்தும் ‘நிலை’ உயரவில்லை. ஆக மக்கள் தரப்பிலும் தவறு உள்ளது. ‘படை’ இருந்தும் பயந்த சனம் வாழும் மண்ணில் மாற்றம் வராது, மக்கள் வாழ்வு ஏற்றம் பெறாது. போராட மக்கள் முன்வர வேண்டும். (நான் அறவழி போராட்டத்தை சொன்னேன், தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். இல்லையேல் நான் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் அல்லவா?…)

எவராவது அழிக்க வந்தால், ஒரு தேன் பூச்சிகூட தன் இருப்பைக் காக்கவும், இனத்தைக் காக்கவும் ‘ஒற்றை’ கொடுக்கை வைத்துக்கொண்டு போராடுகின்றது. அது வெறுமனே சாவதில்லை. போராடியே மரணமடைகின்றது.

ஆர்.சனத்

Related Articles

Latest Articles