மலையக இளைஞர்களின் உலக சாதனை பயணம் வெற்றிகரமாக முன்னெடுப்பு….!

பொகவந்தலாவை, கொட்டியாகலை தோட்டத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள், உலக சாதனை படைக்கும் நோக்கில், யாழ்ப்பாணம் கோட்டையிலிருந்து காலி கோட்டை வரையில் தொடர் நடைபவனியாக வரவுள்ளனர்.

சுமார் 566 கி.மீ. தூரத்தை மூன்று நாட்களுக்குள் ஓய்வெடுக்காமல் அடைவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

ஆர். ஏ விக்னேஸ்வரன் மற்றும் ஆர்.ஏ.தயாபரன் ஆகியோர் இன்று அதிகாலை 4.00 மணியளவில் யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்பாக தமது நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஏ-9 வீதியூடாக அனுராதபுரத்துக்கு வந்து அநுராதபுரத்திலிருந்து புத்தளம் வரையிலும் புத்தளத்திலிருந்து நீர்கொழும்பு வரையிலும், நீர்கொழும்பிலிருந்து கொழும்புக்கு வந்து பின்னர் காலி கோட்டை வரை சென்றடையவுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டனியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனின் வேண்டுகோளுக்கு இணங்க விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் இதற்கு பூரண ஆதரவை வழங்கியுள்ளது.

அதேவேளை, இதற்கு முன்னர் இவர்கள் யாழில் இருந்து காலி வரையிலான 566 கிலோமீட்டர் தூரத்தை நான்கு நாட்கள் நடந்தும், புத்தளத்தில் இருந்து சீதுவை வரையிலான 147 கிலோமீட்டர் தூரத்தினை வெறுமனே ஆறு மணி நேரத்திலும் பயணித்து சாதனை படைத்துள்ளதுடன், கொழும்பில் இருந்து பொகவந்தலாவை வரையிலான 184 கிலோமீட்டர் தூரத்தை 18.5 மணித்தியாலங்களில் நடந்து சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பொகவந்தலாவ நிருபர்

Related Articles

Latest Articles