மலையக உதவி ஆசிரியர்கள் பிரச்சினைக்கு தீர்வு!

நீண்டகாலமாக இழுபறி நிலையில் இருந்துவந்த மத்திய மாகாண உதவி ஆசிரியர்களை , ஆசிரியர் சேவையின் மூன்றில் ஒன்றுக்கு உள்வாங்கி அவர்களுக்கான நியமனத்தை அடுத்த மாத இறுதிக்குள் வழங்குவதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் உறுதியளித்துள்ளார்.

மத்திய மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் மத்திய மாகாண ஆளுநர் லலித் கே கமகேயை சந்தித்து மத்திய மாகாண உதவி ஆசிரியர்களின் நியமன பிரச்சினைக்கு தீர்வு சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது மத்திய மாகாணத்தில் தமது கோவைகளை பூர்த்தி செய்துள்ள எஞ்சியுள்ள 395 உதவி ஆசிரியர்களுக்கு நியமனத்தை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே நேற்றைய சந்திப்பும் இடம்பெற்றது. இதன்போது கோவைகளை பரிசீலனை செய்வதற்கு ஒரு மாத காலம் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததுடன் இதன் பிறகு நியமனத்தை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி அடுத்த மாத இறுதிக்குள் மத்திய மாகாண உதவி ஆசிரியர் நியமனத்தை முழுமையாக வழங்குவதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரத்ன உறுதி அளித்துள்ளதாக மத்திய மாகாண முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles