மலையக மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி தலைமன்னாரில் இருந்து மாத்தளைவரை முன்னெடுக்கப்பட்டுவரும் மலையக எழுச்சி பயணத்துக்கு ‘பிடிதளராதே’ அமைப்பு பேராதரவை வழங்கியுள்ளது.
மேற்படி அமைப்பின் செயற்பாட்டாளர்கள் நேற்று பாத யாத்திரையில் பங்கேற்று தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

‘பிடிதளராதே’ அமைப்பின் சார்பில் அதன் தலைவரும் நாடகக் கலைஞருமான மு. காளிதாசன், ஆலோசகரும், ஊடகவியலாளருமான ஆர். சனத், பொதுச்செயலாளர் ந.சுசிதரன், இணைப்பாளர் ரா.கவிசான், நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிரபு, தனுசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அத்துடன், மலையக உரிமைக்குரல் அமைப்பும் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.
மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படவேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பன உட்பட 10 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து ‘மலையக எழுச்சி பயணம்’ முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

2023 ஜுலை 28 ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பமாகவுள்ள குறித்த பாத யாத்திரை ஆகஸ்ட்12 ஆம் திகதி மாத்தளையை வந்தடையவுள்ளது. நேற்று 10 ஆவது நாளாகும். கெக்கிராவையில் இருந்து தம்புள்ளைவரை பாத யாத்திரை இடம்பெற்றது.
இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், சிவில் அமைப்புகள் மற்றும் மலையக சமூகம்சார் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய “மாண்புமிகு மலையக மக்கள்” கூட்டிணைவினால் இப்பாத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. .
