மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் முழுமையானதொரு விசாரணை மேற்கொள்ளப்பட்டு இது விடயத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புபட்டுள்ள அத்தனை குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளிலிருந்து சிறார்கள் தொழிலுக்கு செல்வதை தடுப்பதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும், இதனை மேற்கொள்வதற்கு மலையக இளைஞர்கள் முன்வரவேண்டும். அதற்கு அரசியல் மட்டத்தில் தேவையான உதவிகளை வழங்குவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் எனவும் வேலுகுமார் எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ சிறார்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில் அற்ப பணத்துக்கு ஆசைப்பட்டு சிறார்களை வெளியிடங்களுக்கு தரகர்கள் வேலைக்கு அழைத்துச்செல்கின்றமையானது ஆட்கடத்தலுக்கு ஒப்பான செயல்.எனவே, சிறார்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் அவர்களை பொறுப்பேற்பவர்கள் என அனைவரும் ஏதேவொரு விதத்தில் குற்றவாளிகளே.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மலையக சிறுமியொருவர் உயரிழந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல தரப்பினரும் இது தொடர்பில் குரல் கொடுத்துவருகின்றனர். இளைஞர்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்திவருகின்றனர். ஆகவே, இந்த சம்பவத்துக்கு நீதி நிவாரணத்தை வலியுறுத்தும் அதேவேளை சமூகமாற்றத்துக்கான விழிப்புணர்வு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் இவ்வாறானதொரு துயர் சம்பவம் நிகழாமல் இருப்பதை தடுக்க முடியும்.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இருந்து சிறார்கள் வேலைக்கு செல்வதை தடுப்பது தொடர்பில் வலைத்தளங்களில் குரல் கொடுக்கும் இளைஞர்கள், களத்தில் இறங்கி சமூகபொறுப்புடன் விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும். அதற்கான முழு ஒத்துழைப்பையும் நாம் வழங்குவோம். சிறார்களுக்கு கல்வி பெறுவதற்குள்ள உரிமையையும் எடுத்துரைப்போம். கல்வியே சமூகமாற்றத்துக்கான பலம்பொருந்திய ஆயுதம். அதனை இடையில் கைவிடுவதுகூட சமூக பின்னடைவுக்கு காரணமாக அமையும்.
தமது வீட்டில் நடந்த சம்பவம் தொடர்பில் உண்மை நிலைவரத்தை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டிய சமூகப்பொறுப்பு, கடமை ரிஷாட் பதியுதீனுக்கு இருக்கின்றது. அவர் ஒரு மக்கள் பிரதிநிதி. கட்சித் தலைவர். இதற்கெல்லாம் அப்பால் ஒரு தந்தை. எனவே, தாமாக முன்வந்து விசாரணைக்கு ஒத்துழைத்து, உண்மை வெளிவர, நீதியை பெற்றுக்கொடுக்க ஒத்துழைப்பு வழங்குவாரான நம்புகின்றோம்.” – என்றார் வேலுகுமார் எம்.பி.