அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான முதலாவது சபை அமர்வு இன்று (12) தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவி தலைமையில் நடைபெற்றது.
இந்த சபை அமர்வு அக்கரப்பத்தனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதுடன், பிரதி தவிசாளர் பிரதீப் தினேஷன், வட்டார உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
சபையின் முதல் நாள் அமர்வில், 2026ஆம் ஆண்டில் பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ள வேண்டிய மக்கள் நலப் பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு, சமூக தேவைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது, மலையக மக்களின் நில உரிமை, சம்பளம், தொழிற்சங்க உரிமைகள், சமூக நீதி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டு உயிர் நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் வகையில் சிறப்பு அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.
சபை உறுப்பினர் ராசையா கவிஷான், மலையக தியாகிகளின் வரலாறையும் அவர்கள் செய்த தியாகங்களையும் மறக்காமல் நினைவுகூர வேண்டிய அவசியத்தை சபையில் வலியுறுத்தி உரையாற்றினார். அவர்களின் தியாகங்கள் இன்றைய தலைமுறைக்கும் எதிர்கால தலைமுறைக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதன் பின்னர் சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மலையக தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் பிரதிநிதித்துவம், வரலாற்று நினைவூட்டல் மற்றும் சமூக பொறுப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த இந்த முதலாவது சபை அமர்வு, 2026ஆம் ஆண்டிற்கான பிரதேச சபை செயல்பாடுகளுக்கு வலுவான ஆரம்பமாக அமைந்தது.
கௌசல்யா










