மலையக தொழிலாளர் முன்ணணிக்கு செலுத்தும் மாதாந்த சந்தாவை நிறுத்துமாறு மலையக மக்கள் முன்ணணியின் பிரதிசெயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“தொழிலாளர்கள் தங்களின் வியர்வையால் செலுத்தும் சந்தாவினால் சம்பந்தமில்லாத ஒரு சிலர் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருவதை தொடர்ந்தும் அனுமதிக்காதீர்கள்.
நாம் வழங்கும் சந்தாவின் ஒவ்வொரு ரூபாய் ஊடாக தொழிலாளர்களுக்கு ஏதாவது பயன் இருக்க வேண்டும். எமது வாழ்க்கை மாற்றத்துக்கு இந்த சந்தா பணம் பயன்பெற வேண்டும் எமது பிள்ளைகளின் கல்விக்கு ஓரளவாவது பயன் இருக்க வேண்டும் வயோதிபர்கள் நோயாளிகள் ஏதாவது பயன் பெற வேண்டும்.
ஆனால் இன்று நடப்பதென்ன மேல் மட்டத்தில் இருக்கும் ஒரு சிலர் தங்களுக்கு தேவையான விதத்தில் சந்தா பணத்தை செலவு செய்கிறார்கள் தேவையற்ற கூட்டங்களை நடத்தி லட்சக்கணக்கான பணத்தை வீணாக்குகிறார்கள்.
மலையகத்தின் ஏனைய தொழிற்சங்கங்கள் தங்களின் சந்தா விபரங்களை தொழில் திணைக்கள தலைமையகத்துக்கு தெரிவிப்பது போன்று மலையக தொழிலாளர் முன்ணணி தனது கணக்குகளை அறிவிக்கவில்லை என்று தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வெளிப்படையாக அறியமுடிகிறது.
இதன் விபரங்கள் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இது தொழிலாளர்களுக்கு செய்யப்படும் அடிப்படை மனித உரிமை மீறல் மட்டுமல்ல அப்பட்டமான துரோகக் கொள்ளையாகும். இதையெல்லாம் விட்டு விட்டு கட்சிப்பணத்தில் கூட்டம் போட்டு கும்மாளம் அடித்து கணக்கு கேட்ட என்னை கட்சியிலிருந்தி நீக்குவதற்க்கு கூட்டம் கூட்டுவதற்கு தலைமையின் வேலை ?
உண்மையிலேய சந்தா பணத்தில் ஊழல் செய்யவில்லை என்றால் துணிவோடு கணக்கு அறிக்கையை வெளிப்படையாக சமர்ப்பிக்க வேண்டும்.
காரியாலயத்தில் உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வு இல்லை கொடுக்கும் சம்பளத்தையும் உரிய திகதியில் வழங்குவதில்லை கழிக்கப்படும் EPF பணம் ஒழுங்காக திணைக்களங்களுக்கு அனுப்பப்படுவதில்லை. கட்சியை விட்டு விலகும் அல்லது ஓய்வு பெறும் அல்லது மரணிக்கும் உத்தியோகத்தர்களின் EPF கொடுப்பனவுகள் கூட தேவையற்ற விதத்தில் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றது. கேள்வி கேட்பவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் கட்சியில் அங்கத்துவம் சரிபாதியாக குறைந்துக் கொண்டே வருகிறது.
பல LT வழக்கு ACL வழக்குகள் தோல்வியில் முடிகின்றன. இது நிலை தொடர்ந்தால் ஒரு பக்கம் கட்சி என்று இருக்காது மறுபக்கம் நாம் இரத்தம் சிந்தி உழைத்து வழங்கும் சந்தா பணத்தினால் ஒரு சிலர் ஆயிரக்கணக்கில் சம்பாதித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள்.
இன்று லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு கணக்கு இல்லை உயர்பதவியில் இருப்பதாகக் கூறிக்கொள்பவர்கள் இந்த அநீதி தெரிந்தும் கூட. தலைமைக்கு பயந்து அமைதியாக உள்ளார்கள். கேள்வி கேட்பவர்களையும் கணக்கு கேட்பவர்களையும் எப்படி சமாளிப்பது என்று நிதிச் செயலாளர் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்.
ஆகவே மலையக மக்கள் முன்ணணியின் மீதும் மலையக தொழிலாளர் முன்ணணியின் மீதும் அதன் வளர்ச்சியின் மீதும் உண்மையான பற்று இருந்தால் தொழிலாளர்கள் இந்த தொழிற்சங்கத்துக்கு செலுத்தும் சந்தா பணத்தை உடனடியாக நிறுத்துக்கள். சந்தா பணத்தை நிறுத்துவதால் உங்களுக்கு சேவை செய்ய முடியாது என அவர்கள் கூறினால் நிச்சயமாக உங்களின் சட்டரீதியான தொழில் பிரச்சினைகளை நான் தீர்த்துவைப்பேன் .” – என்றார்.