மலையக மக்களின் கோரிக்கைகளுக்கு வடக்கில் முழு ஆதரவு

இருநூறு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கூலிகளாக அழைத்துவரப்பட்ட தமிழர்கள் தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை கால்நடையாகவே வந்தடைந்ததை நினைவுகூரும் நடைபயணத்திற்கு யுத்தத்தின் சுவடுகளைஇன்றும் சுமந்து நிற்கும் முல்லைத்தீவில் ஆதரவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவின் ஏற்பாட்டில், “வேர்களை மீட்டு உரிமை வென்றிட“ எனும் தொனிப்பொருளில மலையகத் தமிழ் மக்களின் 200 வருட வலி மிகுந்த வரலாற்றை பறைசாற்றும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் இந்த நடைபவணி முன்னெடுக்கப்படுகின்றது.

தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையான நடைபவனி கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தலைமன்னாரில் உள்ள புனித லோரன்ஸ் தேவாலயத்தில் ஆரம்பமானதோடு, பாத யாத்திரை ஓகஸ்ட் 12ஆம் திகதி மாத்தளையில் நிறைவடையவுள்ளது.

மொத்தம் 252 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இந்த நடைபயணத்திற்கு பலரும் தமது ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை வழங்கி வரும் நிலையில் முல்லைத்தீவில் பல்வேறு தரப்பினரும் இணைந்து பேரணியை நடத்தி ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு – புதுகுடியிருப்பு சந்தியிலிருந்து கைவேலி வரையில் நடைப் பயணமாக முன்னெடுக்கப்பட்ட ஆதரவு பேரணி அங்கிருந்து வாகன ஊர்வலமாக கிளிநொச்சியை அடைந்துள்ளது.

இந்தப் பேரணிக்கு மத குருமார், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அர சார்பற்ற நிறுவன ஊழியர்கள், இளைஞர்கள், வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்ட பொது மக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தி பேரணியில் பங்கேற்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (28) தலைமன்னாரில் ஆரம்பமான நடைபயணம் நேற்று மாலை மடுவை வந்தடைந்ததோடு, இன்றைய தினம் ஓய்வுக்கான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் மடுவில் ஆரம்பமாகும் பயணம் செட்டிக்குளத்தை அடையவுள்ளது.

Related Articles

Latest Articles