மலையக மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் – முருங்கன் பகுதி மக்கள் வலியுறுத்து

“மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கான காணி உரிமை உட்பட பாத யாத்திரை ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளுக்கும் ஆதரவு வழங்குவோம்.”

இவ்வாறு மன்னார், முருங்கன் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னாரிலிருந்து, மாத்தளை வரையான ‘மலையக மக்களின் ‘எழுச்சி’ பயணம் இன்று மூன்றாவது நாளாகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

தலைமன்னாரில் இன்று காலை 5 மணிக்கு ஆரம்பமான பாத யாத்திரை முற்பகல் 11 மணியளவில் முருங்கன் வந்தடைந்தது.

மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படவேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பன உட்பட 10 பிரதான கோரிக்கைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. அந்த கோரிக்கைக்கு மக்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

குறித்த பாத யாத்திரை ஆகஸ்ட்12 ஆம் திகதி மாத்தளையை வந்தடையவுள்ளது.

இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், சிவில் அமைப்புகள் மற்றும் மலையக சமூகம்சார் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய  “மாண்புமிகு மலையக மக்கள்” கூட்டிணைவினால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 28 ஆம் திகதி அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. 29 ஆம் திகதி முதல்தான் பாத யாத்திரை இடம்பெற்றுவருகின்றது.

Related Articles

Latest Articles