மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை இறுதிப்படுத்துவதற்கான விசேட கூட்டமொன்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அவரது அமைச்சில் நாளை (05) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள், காணி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் உட்பட விடயதானத்துடன் பொறுப்புரைய உயர்மட்ட அரச அதிகாரிகளின் பங்கேற்புடனேயே இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம், புதிய கிராமங்கள் அபிவிருத்தி சபை என்பவற்றின் பிரதானிகளும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட கூட்டு பத்திரத்துக்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் முழு ஆதரவு என பல்வேறு அமைப்புகள் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையிலேயே காணி உரிமையை ஆவணமாக வழங்குவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் பற்றி நாளை கூட்டத்தில் ஆராயப்பட்டு, காத்திரமான முடிவு எடுக்கப்படவுள்ளது.
மலையக பெருந்தோட்ட மக்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்கான நடவடிக்கையின் மற்றுமொரு அங்கமே இது. இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள தனி வீடுகளுக்கும் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படும்.