மலையக மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லையேல் வீதியில் இறங்கி போராடவும் தயங்கமாட்டோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திகாம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கிய கூட்டமொன்று நேற்று ஹட்டனில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு எதிர்கால அரசியல் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து செயற்பாட்டாளர்களுக்கு விளக்கமளித்து உரையாற்றிய திகாம்பரம் கூறியவை வருமாறு,
“ எதிர்க்கட்சியில் இருந்தபோது தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு பல உறுதிமொழிகளை வழங்கியது. அக்கட்சியினர் தற்போது ஆட்சிக்கு வந்துள்ளனர். ஆனால் அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை.
அரிசி விலையை கட்டுப்படுத்த முடியவில்லை. தேங்காய் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை. எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணம் என்பன பாரிய அளவில் குறைக்கப்படும் எனக் கூறப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. மின்சாரக் கட்டணத்தைக்கூட பொதுபயன்பாட்டு ஆணைக்குழுதான் குறைத்துள்ளது.
தற்போது கூட்டுறவு தேர்தல்களில் அரசாங்கம் தோல்வி அடைந்துவருகின்றது. எனவே, வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அரசாங்கத்துக்கு இருப்பதால் அரிசி மாபியாவுக்கு முடிவு கட்ட வேண்டும். கொள்ளையர்களை பிடிக்க வேண்டும்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை அவதானித்துவருகின்றோம்.
அத்துடன், மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என்றார்கள், சம்பளம் 2 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்றார்கள். அவற்றை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் முழுமையான ஆதரவு வழங்கப்படும்.அவ்வாறு இல்லையேல் வீதியில் இறங்கி போராடவும் தயங்கமாட்டோம்.” – என்றார்.
க.கிஷாந்தன்










