” மலையக மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் கைவிடாது, அம்மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம். ஜீவன் தொண்டமானின் அரசியல் பயணத்துக்கும் உதவிகளை வழங்குவோம்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மறைந்த தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுதாபம் தெரிவித்து பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” எனது நண்பன் ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர், அவரின் மகனான தம்பி ஜீவன் தொண்டமானின் பாரிய பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய இனமான மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான இந்த பணியை சுமையாக கருதவேண்டமாம், புனிதமான செயலாக கருதி செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மலையக மக்களுக்கு பிரச்சினை ஏற்படுகின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாமும், எமது வடக்கு, கிழக்கு மக்களும் உங்களுடன் நிற்போம், குரல் கொடுப்போம், இணைந்து பயணிப்போம். என்னுடைய நண்பனின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமெனில் மலையகத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி ஜீவன் தொண்டமான் பயணிக்க வேண்டும், அதற்கு எமது முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் நாம் வழங்குவோம்.” – என்றார்.
சந்தர்ப்பம்.