‘மலையக மக்கள் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்’ – திகா

நாட்டில் கடந்த சில வாரங்களாக “கொரோனா” பரவல் வெகுவாக அதிகரித்து வருவதோடு மலையகத்துக்கும் வியாபித்துள்ளது. கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொது மக்கள் இந்த சுகாதார நடவடிக்கையை அலட்சியம் செய்து விடாமல் தமது சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” மலையக மக்கள் அனைவருக்கும் தனி வீட்டு வசதிகள் கிடையாது. சுகாதார வசதிகளும் போதுமான நிலையில் இல்லை. மக்கள் நெருக்கமான குடியிருப்புகளில் தான் வாழ வேண்டிய நிலையில் உள்ளார்கள். இவற்றுக்கு மத்தியில் “கொரோனா” பரவல் அதிகரித்து பெரும் சவாலை ஏற்படுத்தி வருகின்றது. வசதிகள் இல்லாவிட்டாலும் கூட நாம் “கொரோனா” விலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.

ஒவ்வொருவரினதும் பாதுகாப்பை முன்னிட்டு அரசாங்கம் வலியுறுத்தி வரும் சுகாதார நடைமுறைகளை தவறாமல் பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவுதல் சமூக இடைவெளியைப் பேணுதல், ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களுக்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் முதலானவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆந் திகதி தீபாவளிப் பண்டிகை வருவதால் கொழும்பு போன்ற தூர இடங்களில் பணிபுரியும் மலையக இளைஞர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். எனினும், நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பல பிரதேசங்கள் முடக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, பண்டிகையை விட தனி மனித பாதுகாப்பும், தேசிய பாதுகாப்பும் முக்கியமானது என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும். பொது மக்களின் நலன் கருதி அரசாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளும் வெற்றி பெறும் போது, நிலைமை சுமுகமாக மாறி, உறவுகள் சங்கமிக்க நிச்சயம் வழிபிறக்கும் என்ற நம்பிக்கையோடு “கொரோனாவை” வெற்றி கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.” – என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles