தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்துள்ள இளைஞர் மாநாடு எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை மு .ப .10.00 மணிக்கு பசறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் உபதலைவரும், பதுளை மாவட்ட அமைப்பாளருமான சிவநேசன் தெரிவிக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர் , பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் உள்ள முன்னணியின் இளைஞர்கள் இம் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
நிகழ்வின் பிரதம அதிதியாக ம.ம.முவின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் கலந்து கொள்ளவுள்ளதோடு, சிறப்பு விருந்தினர்களாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார், ம.ம.முவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் எஸ் .விஜயசந்திரன் ,பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா. ரமேஷ், உட்பட முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மாநாட்டில் கலாசார ஊர்வலம், இளைஞர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் சிறப்பு சொற்பொழிவுகள் என்பன இடம்பெறவுள்ளன என்றார்.
பசறை நிருபர்










