மலையக அரசியல் வரலாற்றில் ஒரு பேராசிரியர் கட்சியின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை மலையக கல்வி கற்ற சமூகத்திற்கு கிடைத்த ஒரு கௌரவமாகவே கருதுகின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான சங்கரன் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்ட பின்பு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்
மலையக அரசியல் வரலாற்றில் பல கட்சிகளிலும் சமூகத்தில் பல்வேறு தரப்பினர் கட்சியின் உயர் பதவிகளில் பதவிவகித்துள்ளனர்.ஆனால் ஒரு கட்சியின் செயலாளராக ஒரு பேராசிரியர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.இது மலையக அரசியல் வரலாற்றில் ஒரு வரலாறாக அமைந்துள்ளது.
கடந்த காலங்களில் மலையக அரசியல் கல்வி கற்றவர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக பேசப்பட்ட பொழுதும் அது நடைமுறைக்கு வரவில்லை.ஆனால் மலையக மக்கள் முன்னணியின், தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் பாராளுமன்ற தேர்தலின் பின்பு கட்சி மறுசீரமைக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
அதே நேரம் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமாக இருந்த ஏ.லோரன்ஸ் தனது உடல் நிலை காரணமாக அந்த பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாத ஒரு நிலை இருப்பதாகவும் தொடர்ந்தும் கூறி வந்த நிலையில் நான் கட்சியின் செயலாளர் நாயகமாக ஏகமனதாக கட்சியின் கவுன்சில் உறுப்பினர்கள் கட்சியின் உயர் பீடம் ஆகியவற்றால் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.என்னை தெரிவு செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
என்னை பொறுத்த அளவில் நான் மலையக மக்கள் முன்னணியில் 1994 ஆம் ஆண்டு முதல் ஒரு உறுப்பினராக இணைந்து இன்று வரை கட்சியின் பல பதவிகளை வகித்து இன்று செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.நான் கட்சியின் வளர்ச்சிக்காகவும் அதன் முன்னேற்றத்திற்காகவும் என்னை அர்ப்பணித்து சேவை செய்திருக்கின்றேன்.
கட்சி பல இக்கட்டான நிலைமைகளை சந்தித்த பொழுதும் நான் கட்சியை விட்டு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வெறிறேவில்லை.எங்களுடைய கட்சியை ஒரு காலகட்டத்தில் ஒரு பயங்கரவாத அமைப்பாகவே பார்த்த காலம் உண்டு.ஆனால் நாங்கள் என்றுமே ஜனநாயக பாதையை விட்டு விலகவில்லை. நானும் எந்த ஒரு நிலையிலும் கட்சியைவிட்டு வெளியேறவில்லை. ஒரு கொள்கையுடன் இந்த கட்சியிலேயே எனது அரசியல் பயணத்தை தொடர்ந்தேன்.
இன்று நான் கட்சியின் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருக்கின்றேன் என்றால் அதற்கு காரணம் கட்சியும் அதன் தலைமைத்துவமும் என்மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கை என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்த கட்சியை எதிர்காலத்தில் மலையகத்தில் மட்டுமல்லாது இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு செய்வதற்கு என்னை அர்ப்பணித்து தொடர்ந்தும் சேவை செய்வேன் எனவும் செயலாளர் நாயகம் சங்கரன் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு