மலையகத் தமிழர்களின் வரலாற்றில் இன்றைய நாள் மகத்தான – மறுமலர்ச்சிக்கு வித்திடும் – புதுவிதி செய்யப்போகும் நாளாக அமையப்போகின்றது. ‘நாம் 200’ திட்டம் மூலம் நமது இளைஞர்கள் எதிர்பார்க்கும் நாளைய மலையகத்துக்கான அடித்தளம் இடம்படும் என உறுதியாக நம்புகின்றோம் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாம்200 நிகழ்வு குறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நமது மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் நகர்வுகளின் ஓர் அங்கமாக மலையக பெருந்தோட்ட மக்களை கௌரவப்படுத்தும் வகையில் அரச அனுசரணையுடன் – அங்கீகாரத்துடன் நிகழ்வொன்று இடம்பெறுவது முன்னேற்றகரமான மாற்றமாகும்.
இதற்கான அங்கீகாரத்தையும் ஆதரவையும் வழங்கியுள்ள ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு மலையக மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேபோல நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்காக எல்லா வகையான ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து முடித்துள்ள எனது அமைச்சின் செயலாளர், ஆலோசகர், அதிகாரிகள் ஆகியோருக்கும் சமூகத்துக்காக தாமாக முன்வந்து செயற்படும் தொண்டர்களுக்கும் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன்.
லயன் யுகத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்பது எமது முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும். அதற்கான நகர்வாக அனைத்து பெருந்தோட்ட மக்களுக்கும் காணி உரிமை வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட ஏற்பாடு இடம்பெறுகின்றது. நமது சமூகத்தின் வளர்ச்சி இனிதான் துரித வேகத்தில் அமையப்போகின்றது. இதுவரை இருந்த தடைகளை தகர்த்து, அதற்கான பாதையை நாம் 200 திறந்துவிட்டுள்ளது. ” – என்றார்.










