சமூக செயற்பாட்டாளரும், ஆய்வாளருமான ஏ.சீரற்ற.ஆர்.ஜோன் “மலையக வரலாற்றை அறிவோம், மாற்றத்திற்கு வித்திடுவோம்” என்ற தொனிப்பொருளில் வடிவமைத்துள்ள 2023 ஆம் ஆண்டிற்கான மலையக நாட்காட்டியின் வெளியீட்டு விழா, ஈழத்து மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் தலைமையில் 28ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு ஹட்டன் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள, ஹட்டன் சமூக நல நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.
நாட்காட்டிக்கான வெளியீட்டு உரையை கொட்டக்கலை, அரசினர் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் ஜெ.சற்குருநாதன் ஆற்றுவதோடு, “200 வருட மலையக மக்கள் வரலாறு- இருளும் ஒளியும்”என்ற தலைப்பில் சிறப்புரையை ஆய்வாளரும், சமூக செயற்பாட்டாளருமான அருட்பணி மா.சக்திவேல் ஆற்றவுள்ளார்.
ஏற்புரையை நாட்காட்டி வடிவமைப்பாளர் ஏ.சீ.ஆர்.ஜோன் ஆற்றவுள்ளார். இந்நாட்காட்டியில் மலையக அரசியல், இலக்கிய, சமூக செயற்பாடுகளுக்கு முக்கிய பங்களிப்பு வழங்கி மலையக சரித்திரத்தில் நீங்கா இடம்பெற்றிருக்கும் பிரபலங்களின் பிறந்த தினங்கள்,நினைவு தினங்கள் மற்றும் மலையகத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்பன புகைப்படங்களை குறித்த நாளில் அடையாளப்படுத்தி தாங்கி நாட்காட்டி வெளி வருகின்றமை சிறப்பம்சமாகும்.
பசறை நிருபர்











