வட்டவளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரச பெருந்தோட்டயாக்கத்துக்கு உரித்தான, மவுண்ட் ஜீன் தோட்டத்தில் கடந்த ஆறுமாத காலமாக பாரிய மரங்கள் தறிக்கப்படுவதாக மக்கள் முறைப்பாடு முன்வைத்துள்ளனர்.
இத்தோட்டத்தில் கடந்தகாலங்களில் 800 ஏக்கரில் தேயிலைப் பயிர் செய்யப்பட்டிருந்த போதும். அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் இத்தோட்டம் சிறிது சிறிதாக காடாகி தற்போது 110 ஏக்கர் காணியில் தேயிலைப் பயிர் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாத காலமாக தோட்ட நிர்வாகத்தால் 600 பாரிய மரங்கள் வெட்ட பணிப்புரை இருந்தபோதும், சுமார் இரண்டாயிரம் மரங்களுக்கு மேல் வெட்டப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தோட்டத்திலுள்ள சகல தேயிலைசெடிகளும் பழுதடைந்து போயுள்ளதாக அங்கு பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது தோட்டத்தில் 110 தொழிலாளர்கள் பணி புரிவதாகவும், இதில் 65 பெண் தொழிலாளர்களுக்கும் 45 ஆண் தொழிலாளர்களுக்கும் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரம் பணி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தேயிலை செடிகள் அழிக்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் மேலும் தங்களுக்கு வேலையின்றி வேறு தொழில்களை நாடவேண்டி வரும் என கவலைதெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தறிக்கப்படும் மரத்திற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் பணம் பெற்றபோதும் தொழிலாளர்கள் எவ்விதமான கொடுப்பனவுகளையோ, நன்மையோ பெறுவதில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட போதிலும் அதன் பெறுமதி பல கோடி ரூபாவாகும்.
இது குறித்து அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.