கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்பு கினிகத்தேனை , மவுன்ஜின் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் (02.11.2021) வேலைக்கு திரும்புகின்றனர்.
கள விஜயம் செய்து பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்டபான பேச்சுவார்த்தை நேற்று (30.11.2021) மாலை 6.30 மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தை மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் தலைவர் வின் கமான்டர். பி.டி.அபயசூரிய தலைமையில் நடைபெற்றது.பேச்சுவார்த்தையில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னிணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மலையக தொழிலாளர் முன்னணியின் நிர்வாகம் தொழில் உறவு தொழிலாளர் கல்வி இயக்குனர் கணகராஜ் மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பாளர் குமார் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர் தேசிய சங்கம் உட்பட ஏனைய தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்.
மவுன்ஜின் தோட்ட தொழிலாளர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.நான் கடந்த வாரம் இவர்களை நேரில் சென்று சந்தித்து கொழும்பில் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தேன்.
அதற்கு அமைய இன்று கொழும்பில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.இதன்போது அடுத்த வாரம் குறித்த கினிகத்தேனை மவுன்ஜின் தோட்டத்திற்கு நேரடியாக மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் தலைவர் தலைமையில் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கிருக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தருவதாக தலைவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தொழிலாளர்களின் வேலை நாட்கள் தோட்டத்தை முறையாக பராமரித்தல் குடியிருப்பு பிரச்சினைகள் பாதிக்கப்பட்டுள்ள தேயிலை செடிகளை மீள உற்பத்தி செய்து புதிய கன்றுகள் நாட்டுதல்.தொழிலார்களுக்கான போனஸ் கொடுப்பனவு போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாகவே இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
விசேடமாக தொழிலாளர்களுக்கு காணிகளை பிரித்து கொடுத்து அவர்களே அதனை பராமரித்து தேயிலையை நிர்வாகத்திற்கு விற்பனை செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.இது தொடர்பாக கள விஜயத்தின் பின்பு ஏனைய தொழிலாளர்களின் கருத்தையும் குறித்த நிர்வாகத்தினரின் கருத்தையும் பெற்றுக் கொண்டு இறுதி தீர்;மானம் எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது எனவும் தொழிலாளர்கள் அனைவரும் நாளை முதல் (02.12.2021) வேலைக்கு திரும்புவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.பேச்சு வார்த்தை சுமூகமாக இடம்பெற்றது.பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களுக்கான போக்கு வரத்து வசதிகளை மலையக மக்கள் முன்னணி மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா நிருபர் – எஸ். தியாகு