மஸ்கெலியாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் மண்ணுக்குள் புதையுண்டு மரணம்

மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மணிமேடு சரிந்து வீழ்ந்ததில் மண்ணுக்குள் புதையுண்டு நேற்றிரவு (12.09.2020) உயிரிழந்துள்ளார்.

பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் புளூம்பீல்ட் பிரிவைச்சேர்ந்த சுப்ரமணியம் அமிலசந்திரன் (வயது -29) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

தேயிலை மரங்களைப் பிடுங்கி, பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில்ஈடுபட்டுக்கொண்டிருக்கையிலேயே மண்மேடு சரிந்ததால் அவர் மண்ணுக்குள் புதையுண்டு பலியானார் எனவும், தலையின்மேல் பகுதி மட்டுமே வெளியில் தெரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் தொழில் புரியும் குறித்த நபர் நேற்றிரவே வீட்டுக்கு வந்துள்ளார், அதன்பின்னர் மாணிக்கக்கல் அகழப்போவதாக மனைவியிடம் கூறிவிட்டு இரவு 9 மணிக்கு வீட்டைவிட்டுச்சென்றுள்ளார்.

பொழுதுவிடிந்தம் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிச்சென்றபோதே அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவருக்கு இரண்டு வயதில் குழந்தையொன்றும் உள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மஸ்கெலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

க.கிசாந்தன், கே. சுந்தரலிங்கம்

Related Articles

Latest Articles