மஹதோவ தோட்டத்திலிருந்து லுணுகல வரையிலான 7.2 கிலோமீற்றர் நீளமான வீதியின் புனரமைப்புப் பணிகள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார்.
குறித்த வீதியின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனை உடனடியாக திருத்தத் தருமாறும் பொதுமக்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த வீதியின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்குமாறு குறித்த திட்ட பணிப்பாளரிடமும், பதுளை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளரிடமும் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த வீதியைப் புனரமைப்பதற்கான பணிகள் 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பொதுவாக தோட்டப் புற வீதியொன்றை நிர்மாணிக்கும் பணிகள் பெருந்திட்டங்களில் உள்ளடக்கப்படுவதில்லை.
எனினும், மாகாண அமைச்சராக இருந்த போது செந்தில் தொண்டமானின் முயற்சியால், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவின் கீழ் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டத்தில் இந்த வீதியை புனரமைக்கம் திட்டமும் உள்ளடக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 2020ஆம் ஆண்டில் நிறைவுசெய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், 2019ஆம் ஆண்டு மாகாண சபை ஆட்சி முடிவுக்கு வந்தபின்னர் இந்த செயல்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த வீதி புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகளை இடைநிறுத்தாமல், உடனடியாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
வீதி அபிவிருத்தி குறித்த திட்ட பணிப்பாளரிடமும், பதுளை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளரிடமும் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.