மஹிந்த எடுத்த தவறான முடிவால் பற்றி எரியும் நாடு – வெல்கம

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் தேவ சாபத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதனால்தான் வீதியில் இறங்கி செல்லமுடியவில்லை. கோ ஹோம் கோத்தா என்ற கோஷம் எல்லா இடங்களிலும் ஒலிக்கின்றது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கோத்தா கோ ஹோம் என்ற விடயத்தை நான்தான் முதன் முதலில் வலியுறுத்திக் கூறினேன். அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டேன். பிரதேச சபையில்கூட அங்கம் வகிக்காத அவரை வேட்பாளராக களமிறக்க வேண்டாம் என அழுத்திக் கூறினேன். ஆனால் குடும்ப உறுப்பினர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்பதற்காக மஹிந்த ராஜபக்ச தவறான முடிவை எடுத்தார். அந்த தவறான முடிவால்தான் நாடு இன்று பற்றி எரிகின்றது. கோத்தா போட்டியிட்டதால் நான் அரசிலிருந்து வெளியேறினேன்.

மைத்திரிபால சிறிசேன சொல்வதெல்லாம் பொய். 19 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இன்று கதைக்கின்றார். ஆனால் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அவரின் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினர். எனக்கும் அமைச்சு பதவி தருவதாக சொன்னார். ஆனால் நான் செல்லவில்லை.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் தேவ சாபத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த கூற்றை இல்லையென சொல்லவேண்டாம், தொடர்புபடாத நீங்களும் சாபத்துக்கு உள்ளாக வேண்டிவரும். இன்று வீதியில் இறங்கி செல்ல முடியவில்லை. கோ ஹோம் கோத்தா என மக்கள் கூச்சலிடுகின்றனர். மஹிந்தவை மக்கள் மன்னர்போல்தான் கருதினர். அவருக் தேவ சாபத்துக்கு உள்ளாகியுள்ளார்.” – என்றார்.

Related Articles

Latest Articles